அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்டவிரோதமாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய தடுப்புச் சுவர் கட்டப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இதற்காக, 5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கும்படி, டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டது. ஆனால், இதற்கு நிதியை ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி நிதி ஒதுக்குவதை எதிர்ப்பதால், தடுப்புச் சுவருக்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும், ஜனநாயக கட்சி தலைவர்களில் ஒருவருமான நான்சி பெலோசி, செனட் சிறுபான்மை தலைவர் சுக் சூமெர் ஆகியோரை டிரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் தேசிய அவசர நிலையை அறிவித்து அதைக் கட்டுவேன் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
Post a Comment