திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிக விருவிருப்பாக நடைபெற்றுவருகிறது.
வரக்கூடிய மார்ச் மாதம் ரயில் சேவை துவங்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை திட்டத்தில் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரையிலான 122 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன் பின் சில ஆண்டுகளுக்குப்பின் இதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த அகல ரயில்பாதை திட்டம் மிகவும் தாமதமாக நடைபெற்றுவந்த நிலையில் ஒரு வழியாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான 72 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரையிலான இத்திட்டம் திறுத்தி போடப்பட்ட நிலையில் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்காகவே ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் வரை ஒரு பிரிவாகவும், தில்லை விளாகத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ஒரு பிரிவாகவும், திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை மற்றொரு பிரிவாகவும் என மூன்று பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை 26 கிமீ தூரத்தில் திருநெல்லிக் காவல் வரையில் 15 கிமீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கப்பட்டு திருநெல்லிக்காவல் வரை நடைபெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 26ம்தேதி திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான 25 கிமீ அகலரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் என்ஜின் சோதனை ஒட்டம் நடைபெற்றது.
அதன்பிறகு ரயில்வே நிலைய கட்டிடங்கள், பிளாட்பார்ம்கள், எலக்ட்ரிக்கல் பணிகள், ரயில் நிலையநடை மேம்பாலம், ரயில்வே கேட் அருகில் சிக்னல் அமைக்கும் பணி போன்ற வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம், பிப்ரவரி மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற உள்ளது. அதேபோன்று திருத்துறைப் பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை வரை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிஆர்எஸ் (கமிஷன் ஆப் ரயில்வே சேப்டி) அனுமதி கிடைத்த பிறகு வரும் மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளது.ரயில் சேவைஎப்போது துவங்கும் என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Post a Comment