முல்லை பெரியாறு தெரியும்... பென்னிக்குவிக் தெரியுமா?


1876 களில் தமிழகம் கடும் வறட்சியில் வாடிய காலம். பஞ்சம் தலைவிரித்து ஆட லட்சக்கணக்கானோர் பசிக்கொடுமையால் மண்ணுக்கு இறையாயினர். சப்தமே இல்லாமல் நிகழ்ந்த மாபெரும் அழிவு. வறட்சி காலத்தில் ஒரு பக்கம் சாரை சாரையாக மக்கள் செத்து விழுந்து கொண்டிருக்க தென் மேற்கு பகுதிகளில் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய வௌள நீர் மக்களை மூழ்கடித்தது.

ஒரு பக்கம் வறட்சி இன்னொரு பக்கம் வௌளநீர். இது இரண்டையும் சமாளிக்க அப்போதைய பிரிடிஷ் அரசாங்கம் தீவிரமாக மண்டையை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தது. தென்னிந்தியாவின் பிரச்சனைகள் லண்டன் பத்திரிக்கைகளை நிரப்பின. விமர்சனங்களால் செய்வதறியாது விக்கித் திணறியது ஆங்கிலேயே அரசு.
ஒரு வழியாக நீண்ட போராட்டத்திற்கு பின் 1882 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது.

அணை கட்டும் பொறுப்பு பொறியாளர் ஜான் பென்னிக்குவிக்கிற்கு வழங்கப்பட்டது.
எழுத்துக்களால் விவரிக்க முடியாத ஓர் உச்ச கட்ட புராஜக்ட் அது. இன்றையை நவீன கால தொழில்நுட்பத்தை வைத்து கூட அதனை எளிதில் செய்து விட முடியாது..! ஆம் மேற்கு திசையில் ஓடி அரபிக் கடலில் வீணாக உப்புநீராக கலக்கும் அந்த ஆற்றை கிழக்கு பக்கமாக திருப்பி விட்டு வங்கக்கடலில் சேர்க்க வேண்டும்.. சேர்த்தால்..? சேர்த்தால் போதும்..! வழியில் இருக்கும் அத்தனை ஊர்களும் செழிக்கும்..

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்டங்கள் 244 கிலோ மீட்டர் ஓடி காலா காலத்துக்கும் பல கோடி மக்களின் தாகத்தை தீர்க்கும்..!
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. நீர் வழித்தடம் இல்லாததால் மலைகளை குடய வேண்டும். மலைகளை குடைவது,அதுவும் அந்த காலத்தில் செய்யமுடியாத காரியம். பல கட்ட உழைப்புக்கு பின் ஒரு வழியாக மலையை குடைந்து பாதையும் அமைக்கப்பட்டது.  இன்று சொகுசாக தேக்கடியில் படகு சவாரி செய்ய காரணம் பென்னிகுவிக் அன்றைக்கு தண்ணீரை திருப்பிவிட்டது தான்..

நீண்ட திட்டமிடுத்தலுக்குப் பிறகு செப்டம்பர் 1887 பொறியாளர் பென்னிகுவிக் 3000 தொழிலாளர்களுடன்  அணை கட்ட களத்தில் இறங்கினார்.175 அடி உயரத்துக்கு அணை எழுப்ப வேண்டும். வெளி உலகத்துடன் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடியாது. அடர்ந்த வனம்,கடும் குளிர், சில நேரங்களில் தொடர் மழை, அதன் காரணமாக பரவிய காலரா, மலேரியா போன்ற நோய்கள். அது போக யானை, கரடி, புலி, பாம்பு உள்ளிட்ட உயிர் கொல்லிகள் என பெரும் சவால்களுக்கு மத்தியில் மும்முரமாக நடைபெற்றது அணை கட்டும் வேலை.  

இக்கடும் சவால்களை சந்திக்க முடியாமல் பலர் இறந்து போயினர்.  ஒரு நாள் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளம் நிச்சயம் அங்குள்ளவர்களுக்கு நெஞ்சு வழியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அதற்குக் காரணம் பாதி அளவு கட்டப்பட்ட அணை தரமட்டமாகி பென்னிக்குவிக்கின் தலையில் இடியாய் விழுந்தது. கொத்து கொத்தாக மக்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.   நீண்ட நாள் கனவு ஒரேயொரு மழையால் அடையாளமின்றி அழிக்கப்பட்டது.
செய்வதறியாது திகைத்து நின்றனர் தமிழர்கள்.. 

கடும் துயரத்திற்கு ஆளான பென்னிகுவிக்கின் இடத்தில் ஓர் சாமானியன் இருந்திருந்தால் தன்னை தானே நொந்துகொண்டு தூக்கில் தொங்கியிருப்பான். ஆனால் பென்னிக்குவிக் ஓர் அதிசயப் பிறவி. உடனே அவர் மெட்ராஸ் புறப்பட்டு வந்து தனது அதிகாரிகளிடம் நடந்ததை விவரித்தார். புரிந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு பென்னிக்குவிக் வில்லனாக தெரிந்தார். மீண்டும் நிதி வரவழைத்து அணை கட்ட முயற்சிப்போம் என பென்னிகுவிக் மனம் தளராமல் உதிர்த்த வார்த்தைகளை எள்ளி நகையாடி பைத்தியக்கார பட்டம் சூட்டினர் ஆங்கிலேயர்கள். 

கண்ணெதிரே உயிரை விட்ட பெயர் தெரியாத ஆயிரம் தமிழர்களுக்காக தலையை அடமானம் வைத்தாவது மீண்டும் கம்பீரத்துடன் அணையை எழுப்ப வேண்டும் என முடிவெடுத்தார் பென்னிக்குவிக். அதற்காகவே வேகமாக
இங்கிலாந்து பறந்தார். தன்னிடம் இருந்த சொத்துக்களை விற்றார். (ஒரு சில ஆய்வில் தனது படுக்கை மெத்தையையும் விற்றதாக உள்ளது) ஓரளவு பணம் தேரியதும் மீண்டும் அணையை கட்ட திட்டமிட தொடங்கினார். இந்த முறை இயற்கையிடம் தோற்று விட கூடாது என மனதில் தீராத வெறி இருந்தது. ஆம் உண்மையில் அது இயற்கைக்கும் பென்னிகுவிக்குமான பலப்பரீட்சை அது.!

பருவ மாற்றங்கள் அறிந்து வேலையை செய்யத்தொடங்கினார் பென்னிக்குவிக். அவரது போராட்ட குணம் வீரத்தமிழர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. படிக்காதவர்களாக இருந்தாலும் முடிந்தளவு உயிரை மாய்த்தாவது எதிர்கால சந்ததிகளுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பை கொட்டினார். கரம் கோர்த்து வேலை செய்தனர்.மெல்ல மெல்ல அணை எழும்பியது. இம்முறை வெள்ளம் வந்தால் மனித கேடயமாக மாறுவதற்கு கூட எம்மக்கள் தயங்கவில்லை.

8 வருட கால நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக 1895 ஆம் ஆண்டு கம்பீரமாக எழுந்து நின்றது முல்லைப் பெரியாறு அணை..! அதை பார்த்து பார்த்து தேம்பி அழுதார் பென்னிகுவிக்.. விடா முயற்சிக்கும் தீராத போராட்ட குணத்துக்கும் கிடைத்த ஓர் மாபெரும் வெற்றி.. தனது திட்டம் நிறைவேறி தமிழகம் செழிக்க வேண்டும் என்பதற்காக போராடிய அவரது முயற்சிக்கு வெகு விரைவிலேயே பலன் கிடைத்தது. இன்று வரை எண்ணிலடங்கா மக்கள் அவர் திருப்பிய தண்ணீரை அருந்தி விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். தேனி சுற்று வட்டார பகுதிகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல பேருடைய பெயர்கள் பென்னிகுவிக் என்று தான் சூட்டப்பட்டுள்ளது. ஆம் அணை கட்டிய அன்றில் இருந்து இன்று வரை பென்னிக்குவிக் தான் அவர்களின் மாபெரும் சரித்திர நாயகன்..!!

(ஜனவரி 15 நேற்று முன்தினம் அவரது 148 ஆவது பிறந்தநாள். தேனியில் அவரது பிறந்தநாளை விழா நடத்தி கொண்டாடியதாக செய்தி கிடைத்தது. அவரை தேட முயற்சித்தேன்.அவரது போராட்ட வாழ்வு கண்களில் நீரையே தேங்க வைத்து விட்டது. பென்னிக்குவிக் ஓர் inspiration..! )

~ அஷ்பாக் அஹமத்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget