எமெர்ஜென்சி வார்டில் இந்திய பொருளாதாரம் - மோடியின் 5 ஆண்டு சோதனை (தொடர்)

மோடியின் ஆட்சிக்காலம்.
பொருளாதாரப் பின்னடைவுகளின் வசந்தகாலம்!

ஐந்தாண்டு நிறைவு, அடுத்து வரும் வேளையில் சற்று ஆய்வுதான் செய்யலாமே.

கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனானாம். அங்கு இரண்டு கொடுமை ஆடிக்கொண்டு வந்ததாம் என்று நமது கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதே போலத்தான் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணிஅரசு செய்த கொடுமைகள் மற்றும் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள் காரணமாக,  2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி என்னும் புதிய கொடுமை அளித்த அளவற்ற வாக்குறுதிகளை நம்பி இதுவரை இல்லாத அளவுக்கு ஆதரவளித்து நம்பிக்கையுடன் நரேந்திரமோடியின் ஆட்சியைக் கொண்டு வந்தார்கள்.

இப்போது அவரது  ஆட்சிக்காலத்தின் ஐந்தாண்டுகள் நிறைவுற்று அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக மறு தேர்தல் இதோ அடுத்த விமானத்தில் அவசரமாக  வர இருக்கும் நிலையில் திருவாளர் நரேந்திர மோடி அவர்களுடைய ஆட்சிக்காலம் ஆறுதல் பரிசாவது பெற்று இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டிய  கால கட்டத்தில் இருக்கிறோம்.

மற்ற துறைகள் ஒரு பக்கம் இருந்தாலும் நாட்டின் இதயத்துடிப்பான பொருளாதார நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதே நமது நோக்கம்.

பளிச்சென்று சொல்லப் போனால், ஒருவித துன்பியலான, நிலையற்ற, உலகப் பொருளாதாரச் சூழல்களை எதிர்கொள்ள இயலாத தேக்கம், சில வானத்தில் போன  சனியனை ஏணி வைத்து இறக்கிய செயல்கள் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவற்றை நாம் விமர்சனக் கண்ணோட்டத்தோடு அல்ல ஆய்வுக் கண்ணோட்டத்தோடு காண்போம் என்பதே  இக்கட்டுரையின் நோக்கம்.    

முதலாவதாக, எகிறிவரும் எரிபொருள் எண்ணெய் விலை, current account deficit (CAD) என்று சொல்லப் படுகிற நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவை காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு இந்த  ஆண்டில் மட்டும் 14 சதவீதம் குறைந்தது மட்டுமல்லாமல் இன்னும் தனக்கென  ஒரு நிரந்தர நாற்காலியில் அமராமல்,  ரூபாயின் மதிப்பு உலகப் பொருளாதாரச் சந்தையில் நடக்கும் இசை நாற்காலியில் இன்னும் சுற்றிக் கொண்டே இருக்கும் நிலையில்தான் இருக்கிறது. இன்னும் எவ்வளவு குறையுமோ என்ற அச்சமூட்டும் எதிர்பார்ப்பில்தான் இருக்கிறது.  

அன்றாடம் உயர்ந்து வரும் எண்ணெய் விலை, பணவீக்கம் இதய  அடைப்பை உருவாக்கி அச்சமூட்டி வருகிறது அல்ல வந்து கொண்டே இருக்கிறது. இதனால் மத்திய ரிசர்வ் வங்கி தனது பண அழிப்புக் கொள்கையை அவ்வப்போது மாற்றி நிலைத்த  தன்மை இல்லாமல் வைத்திருப்பதன் காரணமாக, பங்குவர்த்தகம் படுத்துக் கொண்டு எழ மறுக்கிறது. அந்நிய முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கு மூலதனத்தை வந்தவரை போதும் என்று எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் பங்கு சந்தை முதலீட்டாளர்களின் மொத்த  இழப்பு 8.47 லட்சம் கோடி என்றும் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி மட்டும் பங்குச்சந்தை வணிகம் தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே முதலீட்டாளர்களின் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பால் துடைத்தெரியப் பட்டதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பல முதலீட்டாளர்கள் இப்போது சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்க  ஆரம்பித்து துண்டைக்காணோம் துணையைக் காணோம் என்று ஓடியே போய்விட்டார்கள்.

இந்த வருடம் கடந்த ஆகஸ்ட்   28 ஆம் தேதி வரை சென்செக்ஸ் 10 சதவீதம் இறங்கிவிட்டது.  இது ஆபத்தின் அறிகுறி . பங்குச்சந்தை யில் உருவாகியுள்ள இந்த  வெப்பச்சலனம் அல்லது கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த சில வருடங்களுக்கு மிதமானது முதல் கனமான இழப்புகள் , இடி மின்னல்களுடன் கூடிய சூறாவளியும் அடிக்கும் என்று கணித்த புத்திசாலி முதலீட்டாளர்கள் இன்று போவோம் நாளை நல்ல  நிலை மீண்டால் வருவோம் என்று  தற்காலிக  விடுப்பு எடுத்துக்கொண்டு ஒதுங்கிவிட்டார்கள். 

எண்ணெய் விலை ஏற்றம் என்கிற சுழல்பந்து வீச்சில் பல அரசு நிதி நிறுவனங்கள் தங்களது விக்கெட்டை இழந்து நிற்கின்றன.  Foreign Institutional Investors ( FII) என்கிற  வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அமைப்பு கடந்த அக்டோபர் முதல் வாரம் வரை இந்திய முதலீட்டுச் சந்தைகளிலிருந்து $ 12 பில்லியன் டாலர்களை உர்விக்கொண்டு போய் வேறு நாடுகளில் முதலீடு செய்துவிட்டது . இதன் மதிப்பு இந்திய ரூபாயில்  Rs. 90,000 கோடி ஆகும். இந்த  மாதிரி முதலீடு திரும்ப எடுத்துக் கொள்வது கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்டால் இந்தத் தொகையே மிக மிக அதிகமானதாகும் என்று வல்லுனர்கள் வரலாற்றுக் குறிப்பைத்தருகிறார்கள்.  

இவ்வாறு முதலீடுகள் பின் இழுக்கப் படுவது – அதிலும் வெளிநாட்டு முதலீடுகள் பின் இழுக்கபபடுவதே இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சிக்கும் பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கும் காரணம் Indira Gandhi Institute of Development Researchஎன்கிற மும்பையைச்சேர்ந்த பொருளியல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் திரு. ஆர். நாகராஜ் என்பவர் கூறுகிறார்.  

தொடர்ந்து , இன்றைய இந்தியப் பொருளாதார நிலை, உலகம் சார்ந்த மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகளோடு மல்யுத்தம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஒன்று உலகம் தழுவிய எண்ணெய் விலை உயர்வு, இரண்டு அமெரிக்க நிதிநிறுவனச் சந்தைகளில் வட்டி விகிதங்களின் உயர்வு , மூன்று உலகம் தழுவிய வர்த்தக நடவடிக்கைகளின் பாதகமான பாதுகாப்புகுறைபாடு ஆகியவை. இவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் ஏற்கனவே சீர்கெட்டுக் கிடக்கின்ற  இந்தியப் பொருளாதாரச் சந்தைகளில் முதலீடு செய்ய அச்சப் படுகிறார்கள் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இப்படி எரிகிற  கொள்ளியில் எண்ணெயை விட்டது போல நாட்டில் வாழும் மக்கள் அச்சமுற்று அலறும் வகையில் அரசு மேற்கொண்ட தவறான  கொள்கை முடிவுகள், வேண்டியவர்களுக்கு செய்த சலுகைகள், ஊழல் மற்றும் நிர்வாகத்துறையின் குளறுபடிகள் காரணமாக  பொருளாதார நிலை அவசரச் சிகிச்சைக்கான வார்டில் அனுமதிக்கும் நிலைக்குத்தள்ளப் பட்டுவிட்டது. இன்றைய இந்தியப் பொருளாதாரம் உண்மையிலேயே ஒரு பாதுகாப்பற்ற சூழலிலும் , நிச்சயமற்ற தன்மையிலும் உடனடியாக நல்ல நிலைக்குத்திரும்ப  இயலாத சூழலிலும் மாட்டிக் கொண்டு திணறும் நிலைக்குத்தள்ளப் பட்டுவிட்டதாக, பிரணாப் சென் என்கிற International Growth Centre, அமைப்பின் இந்தியாவுக்கான  இயக்குனர் கருத்துத்தெரிவிக்கிறார்.

-தொடரும்

ஆக்கம்: இப்ராஹிம் அன்சாரி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget