வருமானமே இல்ல... வரிவிலக்கு அளித்து என்ன பயன்?

மத்திய அரசு இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 2019-2020 நிதி ஆண்டு முதல் அடிப்படை வருமான வரி விலக்காக உள்ள 2 லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்துகிறோம் என்றும், ஆண்டு வருமானம் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரிச் சதவீதம் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

 தற்போது தனிநபர்களின் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் ஆக உள்ளது. 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ளோர் 30% வரியும் செலுத்தி வருகின்றனர். வருமான வரி விலக்கு உச்ச வரம்பை கடந்த 4 ஆண்டுகளாகவே உயர்த்தப்படாமல் இருந்தது. 

இன்று பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், ரூ.6.5 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, குறிப்பிட்ட சேமிப்புகள் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை என்றும், இதைவிட கூடுதல் வருமானம் உள்ளவர்கள், வீட்டுக்கடன், கல்விக் கடன் ஆகியவற்றை செலுத்தினால் வரிசெலுத்த வேண்டாம் என்றும், இதன் மூலமாக 3 கோடி நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.   

நியூசு பார்வை:  

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் தேர்தலுக்காக மத்திய அரசு இதை அறிவித்திருப்பதாக விமர்சித்து வருகின்றனர். இந்த விசயம் மக்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், இது சாத்தியமா என்பதை கடந்து மத்திய அரசு எந்த தைரியத்தில் இதை வெளியிட்டது என நாம் பார்ப்போம்.     

தேசிய சாம்பிள் சர்வே ஆபிஸ் (என்எஸ்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த 1972-73ம் ஆண்டுக்குப்பின் இத்தகைய நிலை ஏற்படவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் விவாத பொருளான நிலையில், இதுகுறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது: வேலையின்மை தொடர்பாக வெளியான  புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல என்றும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை எனக்கூறினார். இவர் இவ்வாறு கூறினாலும், மத்திய அரசின் இந்த அறிக்கையை தேசிய புள்ளியியல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட மறுத்ததாக குற்றஞ்சாட்டி, இரண்டு உறுப்பினர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர் என்பதையும் கவனிக்க வேண்டும். 

சரி விசயத்திற்கு வருவோம். நாட்டில் வேலையிழப்பு அதிகரித்துள்ளது என்பதை வருமானம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். வருமானமே இல்லாமல் பல கோடிக்கணக்கானோர் தவித்துக்கொண்டிருக்க 130 கோடி பேரில் வேறும் 3 கோடி பேருக்கு மட்டும் பயன் தரும் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என கூறி ஆட்சிக்கு வந்த மோடி, பக்கோடா விற்க சொல்கிறார். இந்த சூழலில் ஆண்டுக்கு 2.5 லட்சம் வருமானம் ஈட்டும் மக்களின் எண்ணிக்கையே மிகக்குறைவு. அப்படி இருக்க இந்த திட்டம் மிகச்சொற்பமானவர்களுக்கே பயன் தரும். ஆனால், இதன் மூலம் நாட்டுக்கே  விடிவு காலம் பிறந்துவிட்டது போல பாஜகவினர் கொக்கறிக்க தொடங்கி விட்டனர். 

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டில் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கு குறைவாக பொருளீட்டுபவர்கள் ஏழைகளாக காட்டப்பட்டிருந்தனர். அதாவது மாதம் சுமார் ரூ.66 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் உயர்சாதி ஏழைகள் என மத்திய அரசின் அந்த மசோதா தெரிவித்தது. இதை தற்போதைய அறிவிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் பொருளீட்டுபவர்களும் ஏழைகள் தானே. இவர்களிடம் எதற்கு வரி வசூலிக்க வேண்டும். வரி விலக்கு உச்சவரம்பை ரூ.8 லட்சமாக அறிவித்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது. 

சிங்கில் டீக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டுடாதே என்ற சந்தானம் காமெடி போல், கடந்த நான்கு ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு, வேலை இழப்பு, ஜி.எஸ்.டி, தலித், சிறுபாண்மையினர் மீதான தாக்குதல், அழிவுக்கார திட்டங்கள், ரபேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊழல்களை மறந்துவிட்டு இந்த ஒரு திட்டத்தை நம்பி பாஜகவின் தேர்தல் அலையில் விழுந்தால் மீண்டு வர முடியாது.

-செய்திக்குழு

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget