February 2019

இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளின் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். முதலாவதாக பாகிஸ்தான் சென்ற சல்மானுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதை தொட‌ர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்-யை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்ட பின், சவுதி இளவரசர் சல்மான், நேற்று இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் பயணத்தை முடிவிட்டு நேராக இந்தியா வர சவுதி இளவரசருக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தது. அதனால் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி சென்றார். அதன்பிறகு நேற்று‌ இரவு இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, மரபுகளை உடைத்து விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இளவரசரின் அரசு முறை பயணத்தில் ஒரு பகுதியான இந்த இந்திய பயணத்தில், இராணுவத்துறையில் முக்கியமாக சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வர்த்தக ரீதியான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்பு என தெரிகிறது.

பாஜக - பாமக - அதிமுகவின் கூட்டணி, கல்லை கட்டி கிணற்றில் குதிப்பதற்கு சமம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அந்த கூட்டணி படுதோல்வி அடையும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணியி இன்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார் . மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கவே எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், அதிமுக கூட்டணி வைப்பதை தொண்டர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்றும், மேலும், இந்த கூட்டணி கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு சமம் என்றும், அனைத்து தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என்றும் டிடிவி தினகரன் அவர் கூறினார்.

வேலூர் அருகே உள்ள ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக கூட்டணி. மக்களின் நலனுக்காக இல்லை, பணத்துக்காக சேர்துள்ள கூட்டணி. ஜெயலிலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து புத்தகம் வெளியிட்ட ராமதாஸ் அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமல்லாமல் வேறு எதோகூட இதன் பின்னணியில் உள்ளது. 
மேலும் மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக  கடுமையாக விமர்சனம் செய்தார் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2017 - 18 நிதியாண்டில் மத்திய அரசு ஆயிரத்து 157 கோடி ரூபாய் நிதியை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்துள்ளது சிஏஜி அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தால் ஆண்டு தோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை மீறி நிதி தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு இந்த விதிகளை மீறியுள்ளது சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

மத்திய மாநில அரசுகளின் செலவு கணக்கை சரிபார்க்கும் சி.ஏ.ஜி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017 - 18 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டை விடமத்திய அரசு  கூடுதலாக ஆயிரத்து 157 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இன்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக இந்த பிரச்சனை ஏற்படுவதாக பொதுக்கணக்குழு தெரிவித்துள்ளது.


அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 
அதில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் சிறு வியாபாரிகளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் மளிகை கடை, மருந்து கடைகள் போன்ற கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி, கொள்முதல், சேமித்தல், விற்பனை செய்யவது போன்ற நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் முதலாவது முறையாக ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது முறையாக ரூ. 50 ஆயிரமும், மூன்றாவது முறையாக ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 முறை அபராதம் விதித்த பிறகும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற அமைப்பு தமிழக உட்பட இந்தியா முழுவதும் இயங்கிவருகிறது. நாடு முழுவதும் மக்களுக்கு எதிராக மதவாத, பாசிச சக்திகளால் நடத்தப்படும் அநீதிகள், வன்முறைகளுக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் மாநில பாஜக அரசு, PFI அமைப்புடன் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாராமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இந்திய குற்றவியல் சட்ட திருத்த விதி 1908இன் படி தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

நியூசு பார்வை:
கடந்த 2018ஆம் ஆண்டும் இந்த அமைப்புக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து , அந்த அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடைக்கு ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு கூறிய புகார்கள் ஆதாரப்பூர்வமாக இல்லை என கூறியுள்ள தடையை ரத்து செய்தது. இந்த நிலையில், PFI மீதான தடை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
காந்தியின் கொலைக்கு காரணமான இரு முறை தடை ஆணை பெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் நிலையில் தற்போது உள்ளது. பசுவுக்காக எண்ணற்ற இஸ்லாமியர்கள், தலித்துகளை படுகொலை செய்த வி.எச்.பி, பஜ்ரங்தள் அமைப்புகள் எந்த தடையும் இன்றி மத்திய பாஜக அரசால் வளர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் காந்தியின் பொம்மையை துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கோட்சேவின் பக்தர்களான இந்து மகா சபா அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் தங்கள் வீட்டில் குண்டுகளை வீசிக்கொண்டு மதக்கலவரத்தை தூண்டிய இந்து முன்னணி, பாஜக மீது தடை இல்லை.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாரில் காவல் அதிகாரியை படுகொலை செய்த இந்துத்துவ அமைப்புகள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணமான ஆர்.எஸ்.எஸின் மாணவர் இயக்கமான ஏபிவிபி என்ற தீவிரவாத அமைப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. 

 கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களை படுகொலை செய்த சங்பரிவார பயங்கவாரிகள் இன்னும் சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாக கொலை செய்து பெண்களின் கருப்பையில் இருந்த குழந்தையை உருவி தரை அடித்துக்கொன்று ரத்தவெறி ஆட்டம் ஆடிய பாஜக தான் இன்று இந்திய ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ளது. அந்த படுகொலைகளுக்கு காரணமானவர் என கூறப்படும் மோடி தான் இன்று இந்திய பிரதமர். அதை களத்தில் செயல்படுத்திய அமித்ஷா இன்று பாஜகவின் தலைவர். இவர்களுக்கு எல்லாம் தடை விதிக்கப்படாத போது PFI அமைப்புக்கு மட்டும் தடை ஏன்? என்ற கேள்வி எழுகிறது.


காரணம், இஸ்லாமியர்களுக்கான பெரும்பாலான அமைப்புகள் மாநில அளவில் இயங்கி வந்த PFI தேசிய அளவில் நிறுவப்பட்டு பின் தங்கிய ஏழை இஸ்லாமியர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசால் குறி வைக்கப்படும் அப்பாவிகளுக்காக பல சட்ட போராட்டங்களை நடத்தி அவர்களை விடுவிக்க உதவி வருகிறது. அதே போல், இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கு எதிராக மேற்குறிப்பிட்ட மதவாத சக்திகள் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வருவதுடன், அவர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்த உதவி வருகிறது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. ஆனால், இது பாஜகவின் கொள்கையான மனுநீதி சாஸ்திரத்துக்கு எதிரானது. மனு நீதியின் படி ஆட்சி நடத்தும் பாஜக அதற்கு எதிராக செயல்படும் அமைப்புகளை விட்டுவைக்குமா? 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு தீவிரவாதி என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமெரிக்க அரசாங்கம் தீவிரவாதிகளின் குழு என்றும்,  வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா சுரண்ட உள்ளது என்றார்.


டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பிட் பேலஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த அர்பிட் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென  தீ விபத்து ஏற்பட்ட தொடங்கியது.  இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்படையுனர் மற்றும் மீட்புப்படையினர் தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளார்கள். காயம் அடைந்த பலர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் கோவையை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அரவிந்த சிவகுமாரன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சமூக வலைத்தங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியை உபயோகிக்காதவர்கள் அரிதே. இதன் வரிசையில்  டிக் டாக் செயலியும் கூட. டிக் டாக்-ஐ உபயோகிப்பவர்கள் பலர் பிரமலமாக வேண்டுமென பெண்கள் ஆபாசமான முறையில் ஆடை அணிந்தும் ஆண்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தங்களது வீடியோவை பதிவிடுகிறார்கள். இதை பல சிறுவர்கள் பார்க்கக்கூடியதாக இருப்பதால், அவர்களை பாதிப்படைய செய்யகின்றன.
இதற்கு TIK TOK செயலியை தடை செய்தால் மட்டுமே இளைஞர்களை வாழ்க்கையை காப்பாற்ற முடியும் என மனித நேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தமீமும் அன்சாரி கேள்வியெழுப்பினார்.

தமிழக கலச்சாரத்தை சீரழித்து, ஆபாசத்துற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் டிக் டாக் ஆப்-ஐ, பளூ வேல் விளையாட்டை தடை செய்தது போல மத்திய அரசுடன் சேர்ந்து இந்த TIK TOK செயலியும் தடை செய்யப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் பல கட்சிகள் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கின்றன. ஆனால், தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் கூட்டங்களில் காலி சேர்கள் மட்டுமே கிடக்கும். இது குறித்து பேசும் பாஜகவினர், தாங்கள் பணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பவர்கள் இல்லை, கொள்கை அடிப்படையில் கூட்டம் சேர்க்கக்கூடியவர்கள் என சமாளிப்பார்கள். ஆனால் கடந்த 10ம் தேதி திருப்பூரில் நடந்த மோடி கூட்டத்துக்கு காசு கொடுத்து பாஜகவினர் கூட்டம் சேர்த்துள்ளனர். மதுரையில் நடந்த கூட்டத்தில் காலி சேர்கள் தென்பட்டதால் மோடி அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. எனவே, இம்முறை அந்த தவறு நடக்காமல் இருக்க கொள்கையை காலில் போட்டு நசுக்கிவிட்டு காசை பயன்படுத்தி இருக்கிறது பாஜக.
திருப்பூரில் பாஜக ஆதரவு பனியன் தொழிற்சாலைகளில் ஒரு நாள் சம்பளம்
தருவதாகச் சொல்லி தொழிற்சாலைகளின் பேருந்துகளிலேயே ஊழியர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தலைக்கு ரூ.300 மற்றும் குவார்டர் சரக்கு, உணவு கொடுத்து பலரை அழைத்து சென்றுள்ளனர். இதேப கட்டுமான வேலை செய்யக் கூடிய தொழிலாளர்களை பாஜக வினர் பணம் கொடுத்து கூட்டத்துக்குக் அழைத்து சென்றுள்ளனர்.

அதே போன்று, மோடி கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பலர் வடமாநிலத்தவர்களாக இருந்துள்ளனர். பணம் வாங்கிக்கொண்டு வந்த பலர் பொதுக்கூட்ட மைதானத்
திற்குள் வராமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர். மோடியின் ஹெலிகாப்டர் வந்த போது அதை பார்ப்பதற்கு கூட்டம் அலை மோதியது. மோடி வருவதற்கு முன்பு வரை பாஜக மேடையில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள், வெளியே நிற்பவர்கள் உள்ளே வந்து அமருமாறு அழைத்துக் கொண்டே இருந்தனர்.

இதில் விவசாயிகள் திரண்டு வந்தது போல்
காட்டிக் கொள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பேர் பச்சை துண்டு, தலைப்பாகை வழங்கப்பட்டது. இத்தனை நகைச்சுவைகளுக்கு மத்தியில் மோடி சென்ற பிறகு பேசிய வானதி சீனிவாசன் இது காசு கொடுத்து குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் சேர்த்த கூட்டமல்ல என பேசிய போது கலைந்து சென்ற கூட்டம் ஒரு நொடி நின்று மேடையை திரும்பிப்பார்த்து அதிர்ச்சி கலந்த சிரிப்புடன் சென்றது.


சென்னை மற்றும் சென்னைக்கு வடகிழக்கில் உள்ள சிலப் பகுதிகளில் நிலத்திலும் கடலுக்களடியிலும் சென்னையில் இன்று காலை 7 மணியளவில் சில பகுதிகளில் சிறிய அளவில்  நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் குறித்து பயப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது சென்னையில் சில இடங்களில் உணரப்பட்டதாகவும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  தி.நகர் பகுதியில் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். 


ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன். இவர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் அதே பள்ளியில் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் பார்த்திபன் தங்களுக்கு பல உதவிகளை செய்துள்ளதாகவும் கூறி மாணவர்கள் கதறி அழுதது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.




முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிகமாக புகழ் வாய்ந்த அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் இவர், மீன்வளத்துறை சார்பான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் விலாங்கு மீன் போல நழுவி வருகிறார் என அதிமுகவை சேர்ந்த இன்ப துரை புகார் ஒன்றைக் கூறியிருந்தார். 
இன்று அதுபற்றி ஜெயக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் 'நான் விலாங்கு மீன் அல்ல. டால்பின் மீன்.. நான் ஏன்றுமே மனிதர்களுக்கு உதவும் டால்பின் மீன் போல இருப்பேன்' என பதிலைக் கூறினார். இதை கேட்ட  பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரித்துவிட்டு சென்றனர்.

இவர் இவ்வாறு நகைச்சுவையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் செல்வரசூன் (வயது22). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் ராஜசேகர். இவர்கள் இருவரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு (2018) செல்வரசூன் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ராஜசேகருக்கு காதல் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் செல்வரசூன், ராஜசேகர் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் தனியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று செல்வரசூன், அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து சமையல் செய்வதற்காக வயல் நத்தைகளை பிடித்து அவற்றை அதே பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜ சேகர் அரிவாளால் செல்வரசூனின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனால் பதறி போன மகேந்திரன் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்வரசூனை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முத்துப்பேட்டை போலீசார் செல்வரசூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு உள்ளது.

நன்றி: தினத்தந்தி


தமிழகத்தில் அதிமுக அணியில் பாமக, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்றக் கட்சியை ஆரம்பித்துள்ள சசிகலா மற்றும் டிடிவி தினகரன், எந்த கட்சியோடும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனிமையாக போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

டிடிவி தினகரன், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுக உடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் டெபாசிட்டை இழப்பார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலும், 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வரவுள்ளது.

இந்த தேர்தலில் எட்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற முடியாவிட்டால் எடப்பாடியின் ஆட்சி முடிவுக்கு வரும். இதற்கு பயந்து அவர்கள் கூட்டணி அமைத்து அவர்களின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள போராடி வருகின்றனர். 

எந்த கட்சியெல்லால் அவர்களோடு கூட்டணி அமைக்க போகிறதோ அனைவரும் ஜீரோவாக போகின்றனர். கூட்டணியில் இணையப் போகும் அத்தனைக் கட்சிகளும் தேர்தலில் டெபாசிட்டை இழக்கப் போகின்றனர் எனக் கூறியுள்ளார்.


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டியிலும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச தீர்மானித்தார். 
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ-சேபெர்ட் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சேபெர்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பொறுமையாக கம்பெனி கொடுக்க, முன்ரோ இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவர் 40 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அதிரடி காட்டியதால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டுகளையும், கலீல், புவனேஸ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை  வீழ்த்தினர். 
இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார்.

அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அதிரடி காட்டி எதிரணியை கலங்கடித்து வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர்.

இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.


காங்கிரஸும், பாஜகவும், மார்க்சிஸ்டும் வேறு இல்லை என்பதை சபரிமலை, 10% இட ஒதுக்கீடு, சாரதா சிட் பண்ட் வழக்கு போன்றவை நமக்கு எடுத்துக்காட்டின.

அதே போல் அதிமுகவும், திமுகவும் வேறில்லை என்பதை திருபுவனம் ராமலிங்கம் கொலை நமக்கு எடுத்துக்காட்டி விட்டது.
கருணாநிதியை போல் ஸ்டாலின் இல்லை என்பதை அவரே மணிக்கு ஒருமுறை காட்டிக்கொண்டிருக்கிறார். வாய் புளித்ததா? மாங்காய் புளித்ததா? என தெரியவில்லை. ஆனால், ஸ்டாலினின் ஒவ்வொரு கருத்துக்களும் சளித்துக் கொண்டிருக்கின்றன.

ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கும் தொடர்பில்லை என அவரது மகன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் தனது டுவிட்டரில் கொலையாளிகள் 5 பேர் கைது என குறிப்பிட்டுள்ளார். கூடவே மதநல்லிணம் என்ற மசாலாவையும் அரைக்கிறார்.

கொலை நடந்த உடனே பாஜகவினர் திமுக, திராவிட கட்சிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என சாடினர். இவர்கள் அழுத்தத்திற்கு எல்லாம் ஒரு எதிர்க்கட்சியின் தலைவர் ஆளாகுவாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அழுத்தத்திற்கு ஆளாகி ஒரு பொதுவான கருத்தை வெளிப்படுத்தினால் சரி எனலாம். ஆனால் எதிர்க்கட்சி தலைவரே நொடிப்பொழுதில் நீதிபதியாக மாறி கொலையாளிகள் கைதான 5 பேர் தான் என்கிறார்.

ஒட்டுமொத்தமாக இந்த அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் கொள்கை கோட்பாடுகளை தூக்கி எரிந்துவிட்டு சந்தர்ப்பவாத வாக்கு அரசியலுக்குள் குதித்து விடுகின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.


30ஆயிரம் கோடி கடனை  வெறும்  5000 கோடி கட்டி அடைப்பது எப்படி?

'Alok textiles' ன்ற கம்பெனிக்கு பதினைஞ்சி பேங்க் சேந்து 30 ஆயிரம் கோடி ரூபா கடன் கொடுக்குறாங்க.

30 ஆயிரம் கோடி ரூபா கடன வாங்கிட்டு  கம்பெனிக்காரனுங்க வட்டியும் கட்டாம,அசலும் கட்டாம ஏமாத்திட்டு இருக்கானுங்க.
இதனால செம காண்டான நம்ம பேங்க் ஆட்கள்,டேய் வாங்குன கடனுக்கு வட்டி கட்டாம ஏமாத்துறீங்களே நீங்கெல்லாம் உருப்படுவீங்களடானு கேட்டதுக்கு,தோ! பாருங்க சார் கம்பெனி நட்டமாயிடுச்சி, வட்டியெல்லாம் கட்ட முடியாது ,உன்னால முடிஞ்சது பாத்துக்கோனு அசிங்கப்படுத்தி அனுப்பிட்றானுங்க.

ரொம்ப டென்சன் ஆன நம்ம பேங்க்காரங்க,நேரா NCLT ன்ற தீர்ப்பாயத்துக்கிட்ட போயி கடன வாங்கிட்டு திருப்பி கட்டாம ஏமாத்தினு இருக்கானுங்கயானு பிராது கொடுக்குறாங்க...

அந்த பிராத பாத்துட்டு செம டென்சனான NCLT,அந்த கம்பெனிக்காரனுங்கள கூப்பிட்டு,யோவ் கடனை கட்ட முடியுமா முடியாதானு கேக்குறாங்க, அவனுங்க ஏய் ச்சீ ப்பே கட்ட முடியாதுனு சொல்லி NCLT யையும் அசிங்கப்படுத்துறானுங்க.

வேற‌ வழி இல்லாம NCLT யும்,அதான் இவ்வளோ அடக்கமா நட்டமாயிடுச்சி, கடன கட்டமுடியாதுனு சொல்றானேப்பா,அவன் என்ன வச்சிக்கிட்டா இல்லனு சொல்றான்.நம்ம வேணும்னா இந்த கம்பெனிய திவால்னு அறிவிச்சு ஏலம் விடலாம்,ஏலத்துல வர்ற காச வச்சி கடன கட்டிடலாம்னு ஒரு மாஸ்டர் ப்ளான் போட்றாங்க.

அதே மாதிரி மறுநாள் ஏலத்த நடத்துறாங்க,அந்த ஏலத்துல இந்தியாவோட பரம ஏழை அம்பானி அந்த 30 ஆயிரம் கோடி‌ கடன,5000 கோடிக்கு வாங்கிக்கிறேன்னு பெருந்தன்மையா சொல்றாரு.

NCLT ஆபிசர் எல்லா பேங்க் ஆட்களையும் கூப்ட்டு ,என்னப்பா 5000 கோடிக்கு கொடுத்துடலாமானு ஓட்டெடுப்பு நடத்துறாரு.ஓட்டுப்பதிவுல குறைஞ்சது 75 சதவீதம் ஆதரவு இருந்தாதான் ஜெயிக்க முடியும்.ஆனா கிடைக்கிறது என்னமோ 72 சதவீத ஆதரவுதான்.அதானால அம்பானி வெறும் கையோட வீட்டுக்கு போய்ட்றாரு.

வீட்டுக்கு போன நம்ம பரம ஏழை, நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுனு கத்திக்கிட்டே நம்ம ஏழைத்தாயோட மகனுக்கு கால் பண்ணி,நீதி செத்துப்போச்சி,நியாயம் புதைஞ்சி போச்சினு அழுவுறாரு.

இதக்கேட்டு இரத்தக்கண்ணீர் வடிச்ச நம்ம ஏழைத்தாயின் மகன்,உடனே...அந்த NCLT ஆபிசர்க்கு ஃபோன் பண்ணி,யோவ் 75 சதவீத ஆதரவெல்லாம் தேவையில்லை 66 சதவீதமே போதும்னு ரூல்ஸ மாத்துயானு  சொல்லி கோவமா சொல்றாரு.

மறுநாள் நம்ம பரம ஏழை அம்பானி NCLT ஆபிசர் கிட்ட போயி,அதான் 66 சதவீதம்னு மாத்தியாச்சுல,குடுயா கம்பெனியனு 5000 கோடிக்கு அந்தக்கம்பெனிய வாங்கிட்றாரு.

5000 கோடிய பதினஞ்சு பேங்க்கும் சண்ட போடாம பிரிச்சி எடுத்துக்கோங்க...25000 கோடிய ரூபாய காந்தி கணக்குல எழுதுங்கனு நம்ம NCLT ஆபிசர் கடைய சாத்திட்றாரு.

இதுல ட்விஸ்ட் என்னனா ...30ஆயிரம் கோடி கடன் வாங்குனவனும் ஒரே ஆள்தான்,5000 கோடி கொடுத்து அந்த கடன அடைச்சவனும் ஒரே ஆள்தான்.

ஆகமொத்தம் 25000 கோடி மக்கள் பணம் ...அவுட்டு.
#bjp_fails
#save_public_money


இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவா் போட்டி இன்று நடைபெற்றது.
இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய இந்தியா 18.5 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.  இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்கள் எடுத்தார். க்ருனால் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, பிப்ரவரி 10 அன்றுமதியம் 12.30 மணிக்கு ஹாமில்டனில்  தொடங்கும். இறுதிப்போட்டியான அதில் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தமிழக பட்ஜெட் இப்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 
1.நடப்பாண்டில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு 
2.ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது 
3.பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு
4.ஜெர்மன் வங்கி உதவியுடன் 2000 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும். முதல் கட்டமாக சென்னை, கோவையில் 500 பேருந்துகள் இயக்கப்படும்
5.மாற்று திறனாளிகளுக்கு 3000 ஸ்கூட்டர் விலையில்லாமல் வழங்கப்படும்
6.புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்
7.மின் பகிர்மானக் கழகத்திற்கு 22,815 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
8.தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளுக்கு 319 கோடி ரூபாய் ஒதுக்கீடு
9.ஊரக வளர்ச்சித்துறைக்கு 18,273 கோடி ரூபாய் ஒதுக்கீடு
10.வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை ஒழிப்பு பாலின சமத்துவம் போன்ற புதுமை முயற்சி திட்டத்துக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
11.தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
12.பயிர் காப்பீட்டிற்கு ரூ621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
13.ரூ 84 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு 2000 பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
14.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்
15.சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ.40,941 கோடி நிர்வாக அனுமதி அளித்து உள்ளது.
16.கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக்கப்படும்
17.ஹார்வேர்டு போன்ற மற்ற சர்வதேச பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்
18.மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,681 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 19.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் வங்கியிடம் இருந்து ரூ.20,196 கோடி நிதிப் பெறப்பட்டுள்ளது.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ஒரே மேடையில் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார். RSS அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் அவர்களின் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். RSS அமைப்பின் முகமாக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.
இந்தியாவில் அனைத்து மதங்கள் மற்றும் மொழிகள் மதிக்கப்பட வேண்டும். மேலும் பிற மதம் சேர்ந்தவர்கள் சமமாக நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசினார். தேசத்தை விட பாஜக தான் பெரியது என எண்ணி கொண்டுருக்கிறார்கள். இன்னும் 3 மாதங்களில் தேசம் தான் உயர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மோடி என்கிற இமேஜ் முடிவுக்கு வந்து விட்டது. 
தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் ஒரே மேடையில் வெறும் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார், செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடிகர், இயக்குநர் ராம்தாஸ் அவர்களின் இல்ல திருமணவிழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது, சிவக்குமாருடன், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். இதனையறிந்த சிவக்குமார், ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். கடந்த ஆண்டு இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார், ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


தேவேந்திர குல வேளாளர் சமூகம் தங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்க கோரிக்கை விடுத்ததாக மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில், அவ்வாறு எந்த கோரிக்கையும் வரவில்லை என சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.


மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.  இந்த கோரிக்கையை நிறைவேற்ற SC/ST ஆணையம் மற்றும்  தமிழக அரசு மூலம் தான் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், மக்களவையில் கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி குமாரி ஷோபா எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் மக்களவையில் அறிக்கை சமர்பித்துள்ளார். அதில், கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் மோடி கூறியது போன்ற எந்த கோரிக்கையும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.


குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.



அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கையும் 4 வாரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


பிரபல ஜவுளி நிறுவனங்களான தி.நகர், பாடியில் உள்ள தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ்.ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 74 இடங்களில் வருமான வரித்துறை ஜனவரி மாதம் 29ம் தேதி சோதனை தொடங்கியது. கடந்த 6  நாட்களாக நடத்திய இந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இன்று வருமான வரித்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனவரி 29ம் தேதி முதல் 3 நாட்கள் சென்னையில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த 4 நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


நவீன உலகில் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள், ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது சமூக வலைத்தளங்களே இதற்கு அதிகம் பயன்படுத்துகின்றது.
இந்நிலையில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாட்ஸ்அப் தளத்தை சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் தகவல் தொடர்பு தலைவரான கார்ல் வோக் கூறியதாவது:
வாட்ஸ்அப் சேவையை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. எத்தகைய காரணத்தை கொண்டும் வாட்ஸ்அப்-ஐ தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எச்சரிக்கையை மீறி தவறாக பயன்படுத்தினால் வாட்ஸ்அப் சேவை தடை செய்யப்படும். மீறி இந்த செயல்களில் ஈடுபடுவோரைகளை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.


கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் சார்ந்த மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாகன விதி மீறல்களை மீறுவோருக்கு அபராதத்தை 10,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். 
சமூதாய அக்கறை கொண்ட மனுவான இது, இன்று விசாரணைக்கு வந்திருந்தது. அதுசமயம் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட அவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிமன்றம் கேள்வியை எழுப்பியது. இதனை கேட்டு சற்று நிமிடம் சிந்தித்து பின்னர் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.


மகாத்மா காந்தியடியை கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி RSSயை சேர்ந்த நாதுராம் கோட்சே என்பவர் சுட்டுக் கொன்றார். இதனால் ஆண்டுதோறும் ஜனவரி 30-ஆம் நாள் மகாத்மா காந்தியின் நினைவு நாளாகும்.
அன்று காந்தியை கோட்சே துப்பாக்கியால் சட்டது போலவே சம்பவம் உத்தரப்பிரதேசம் அலிகார் இந்து மகா சபை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அப்போது அந்த அமைப்பு தலைவர்களில் ஒருவரான பூஜா சகுண் பாண்டே காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டார். மேலும் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதன்  வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி எதிர்ப்பை கிளப்பியது.

இதையடுத்து காந்தியின் உருவபொம்மையை சுட்ட 13 பேர் மீது அலிகார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்து மகா சபையை சேர்ந்த பூஜா பாண்டே, கணவர் அசோக் பாண்டேவை போலீஸார் கைது செய்துள்ளனர். 


தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 14 துப்புரவு பணி இடத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அந்த பணிக்கு சுமார் 4ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அந்த துப்புரவு பணிக்கு எழுதப்படிக்க தெரிந்தாலே போதுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் விண்ணப்பித்தோர்களில் அதிகப்படியானவர்கள் பி.இ, எம்பிஏ மற்றும் கலை&அறிவியல் படித்த பட்டதாரிகளாகும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் அந்த துப்புரவு பணிக்கு விணப்பித்துள்ளனர். 
தமிழக சட்டசபையில் துப்புரவு பணிக்கு ஊதியமாக மாதம் 17ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலும் அரசு வழங்கும் இதர சலுகைகலையும் பெற்றுக்கொள்ளலாம்.

நியூசு பார்வை:
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததன் விளைவாக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படித்த பட்டதாரிகள் வேலையின்றி, இதை போன்ற துப்புரவு பணிக்கு வேலை தேடி அவதிப்படுகின்றனர். மேலும் அரசு சார்பில் படித்த பட்டதாரிகளுக்கு ஏதேனும் பணி ஏற்பாடு செய்யும் என்ற காலம் கடந்து அரசு சட்டசபையிலேயே துப்புரவு பணிக்கு படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது தேதைனைக்குறியதாகும்.

பொருளாதாரம்,  அதிலும் குறிப்பாக வங்கிப் பொருளாதாரம் என்கிற  பாடம் படித்தவர்களுக்கு நல்ல  கடன் எது கெட்ட கடன் எது என்பது பற்றித்  தெரியும். 

நல்ல கடன் என்பது கடன் வாங்கும் முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட மாத தவணைகளில் ஒழுங்காக கடனைத் திருப்பிக் கட்டுவதாகும். கெட்ட கடன் ( Bad Debts) என்பது விஜய் மல்லையா போன்ற நல்லய்யாக்கள் போட்ட பட்டை நாமம் பற்றியதாகும். இதை வராக்கடன் என்றும் சொல்வதுண்டு. இவ்வாறு, வங்கிகள் கொடுத்த கடன் திரும்ப வராது என்று எதிர்பார்த்தே வங்கிகள்  தங்களது ஆண்டு வரவு செலவில் இந்த இழப்பை ஈடு செய்வதற்காக ஒரு தொகையை ஒதுக்கி வைப்பதும்( Reserve for Bad Debts)  நடைமுறை வாடிக்கை.

உள்நாட்டு வங்கி வர்த்தகத்தில் , அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு , இவ்வாறு வராக்கடன் மூலமாக எழுந்த பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கின்றன. இந்த வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் என்பதும் , இவ்வாறு வராக்கடன் வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடியோர் அரசை ஆள்பவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதும் , இவ்வாறு ஓடியவர்களில் சிலர் நாட்டின் நிதியமைச்சரைப் பார்த்து அவரிடம் பயணம் சொல்லிவிட்டு பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் என்பதும் நமக்கு பல கதைகளைச் சொல்கின்றன.

இவ்வாறு ஓடிப்போனவர்கள் இந்த நாட்டில் விட்டுவிட்டு அல்லது பிணையாக  வைத்துவிட்டுப் போன சொத்துக்களை அரசு வங்கிகள் தங்களது உடமைகளாக்கி தங்களின் கடனை ஓரளவுக்காவது வசூலித்துக் கொள்ள சரியான சட்ட நடவடிக்கைகளை  பொருத்தமாக மேற்கொள்ளவில்லை .

அதுமட்டுமல்லாமல் நிழல் நிதி நிறுவனங்களாக செயல்படும் NBFC என்று சொல்லப்படுகிற Non Banking Finacial Company கள் இந்தத் தொடரின் முதல் பாகத்தில் குறிப்பிட்டபடி IL& FS ல் ஏற்பட்ட  வீழ்ச்சியின் காரணமாக 91,000 கோடி ரூபாய் கடன் இழப்பையும் , நிறைவேறிக்கொண்டிருந்த தொழில் முதலீட்டுத்திட்டங்கள் பாதியோடு நிற்கும் நிலையாலும், பல திட்டங்கள் அடியோடு கைவிடப்பட்ட காரணங்களாலும்   , தாமதிக்கப்பட்ட  நிலையாலும் , நடக்கும் திட்டங்களால் இலாபம் குறைவாக கிடைப்பதாலும் நிலைகுலைந்து நிற்கிறது.


இத்தகைய பற்றி எரிகிற கடுமையான நெருக்கடி நிலையில் தனியார் வங்கிகளின் மீதான நம்பிக்கையற்ற தன்மை என்கிற எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் ஒரு செயலாக தனியார் வங்கிகளிலேயே இரண்டாவது பெரிய  நிலையில் வைத்து எண்ணப் படுகிற ICICI வங்கியின் மிக மேலிடத்தில் இருந்த ஒரு அதிகாரி தனது பதவியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் ஊழல் மற்று தனக்கு வேண்டியவர்களுக்கு ஆற்றில் போகிற தண்ணீரை அப்பா குடி அம்மா குடி என்று பொதுமக்களின் பணத்தை அள்ளி வழங்கியதே ஆகும்.  

இது ஒரு புறமிருக்க கடன் வழங்கும் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்ட காரணத்தால் , (AXIS BANK) ஆக்சிஸ் வங்கியும் எஸ் வங்கியும் (YES BANK) தங்கள் தங்களது தலைமை நிர்வாக இயக்குனர்களுக்கு          CEO)பதவிநீடிப்புத் தர மறுத்து பத்திரமாக அவரவர்களுடைய வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தன. அதற்கு முன்பாகவே பெருந்தொகை பெருவெள்ளமாக தவறான முறையில் கையாளப் பட்டுவிட்டது. மக்கள் தனியார் வங்கிகளின் மீது நம்பிக்கை இழப்பதற்கு தகுந்த காரணமும் அமைந்துவிட்டது.

ஒரு புறம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வேண்டியவர்களுக்கு வாய்க்காலைத் திறந்துவிட, மறுபுறம் தனியார் வங்கிகளும் நாங்கள் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்று சாதித்துக்காட்ட , நாட்டின் பொருளாதாரம் நடுச்சபையில் வைத்து திரவுபதை ஆக்கப்பட்டது. காப்பாற்றத்தான் கிருஷ்ணன் இல்லை.

விவசாயத்துறையில், விளைபொருட்களுக்கான விலையை உயர்த்தி , விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம்  என்று அரசு தேர்தலுக்கு முன் ஆசைகாட்டி அளித்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிடப்பட்டன. 

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஒரு மதிப்பீடு இன்னொரு வகையில் அச்சுறுத்தியது. அதாவது வேலைவாய்ப்பு மற்றும் அதைச்சார்ந்த நுகர்வோர் எதிர்பார்ப்புகள் பொதுவான  பொருளாதார மந்த நிலையால் கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த நுகர்பொருள்களின் நுகர்வுக் குறியீடு 98.3புள்ளியிலிருந்து  94.8 புள்ளிக்கு சரிந்தது என்று RBIகுறிப்பிட்டது. இந்த சரிவு ,  பணசுழற்சியின் வீழ்ச்சியின் அடையாளம் ஆகும். அதாவது மக்களின் வாங்கும் சக்தி குறைவானதன் காரணமாக,  நுகர்வில் வீழ்ச்ச்சி ஏற்பட்டது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசின் தன்மானத்துக்கு , அதாவது ஊழலை ஒரு போதும் எங்களின் நிழலில் கூட ஒண்டவிடமாட்டோம், அடைமழைக்குக் கூட  எங்களின் ஆட்சியின் தாழ்வாரத்தில் ஊழல் வாதிகள் ஒதுங்கமாட்டார்கள் என்று மார் தட்டிக் கொண்டிருந்த அரசின் தன்மானத்துக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டே ஓடிப்போன விஜய் மல்லையா, நிரவ் மோடி, மேஹுல்சோக்சி ஆகியோர் சாட்சியாக நின்றனர். பிரதமரின் ஊழல் ஒழிப்பின் உத்தமர் என்ற  மாய பிம்பம் இதனால் சுக்குநூறாக உடைந்தது.

மோடி தலைமையிலான மத்திய அரசில் வங்கித் துறையில்அதிலும் கடன் வழங்குவதில் மட்டும் 72ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ள தகவல் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப் படாமலேயே நிதித்துறை வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இத்தகவலை மத்திய ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது
கடன் வழங்குதல் என்ற பெயரில் மெகா சூறையாடல் நடைபெற்றுள்ளது என்பது நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலரும்பொருளியல் அறிஞருமான பிரசாந்த் போஸ் கேட்ட வினாக்களுக்கு ஆர்பிஐ  பதில் அளித்துள்ளது. மேலும் கடந்த காங்கிரஸ் கூட்டணி (2009-2014) அரசில் நடந்த வங்கிக்கடன் முறைகேடுகளை விட மூன்று மடங்கு முறைகேடுகள்  மோடியின் ஆட்சியில் நடந்துள்ளது. ஆர்பிஐ வெளியிட்ட இத்தகவலைக் குறிப்பிட்டு பிரசாந்த் போஸ் "புலனாய்வு அமைப்புகள் எங்கே சென்றன?" என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எத்தனை மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சரமாரி கேள்விகளைக் எழுப்பியுள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் நடைபெற்ற மெகா சூறையாடலுக்கு மத்திய அரசும்,நிதித்துறையும் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுத்துறை வங்கி கணக்குகளில் 88 சதவீதம் இந்த கடன் மோசடியில் பயன்படுத்தப்பட்டுள்ளது .
ரிசர்வ் வங்கி தனது பதிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்பொதுத்துறை வங்கிகள்வெளிநாட்டு வங்கிகள்தனியார் வங்கிகள்சிறு நிதி வங்கிகள்,உள்ளூர் பகுதி வங்கிகளில் கடந்த நான்கரை  ஆண்டுகளில்  77 ஆயிரத்து ஐநூற்றி 21கோடிகளுக்கும் அதிகமாக தொழில்வளர்ச்சி, அதற்கான  வங்கிக்கடன் உதவி என்ற பெயரில் சூறையாடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது மோடி சர்க்காரின் நான்கரை ஆண்டுகளின்  ஆட்சியின் சாதனையாகும்.
காங்கிரஸ் ஆட்சியின் இரண்டாம் காலகட்டமாக2009 ஏப்ரல் முதல் மார்ச் 2014 வரை 10 ஆயிரத்து அறுநூற்று 52 வழக்குகளில் 22 ஆயிரத்து 441கோடிகள் கடன் சூறையாடல் நடத்தப்பட்டுள்து. ஆனால் மோடியின் ஆண்டுகளில் முந்தைய அரசில் நடந்ததை விட 55 ஆயிரம் கோடிகள் அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் மோடியின் ஆட்சியில் பொருளாதாரப் புலி அருண்ஜெட்லி என்கிற சிறந்த,  நிறைய சம்பாதிக்கும், பல கார்பரேட் கம்பெனிகளுக்கு இன்னமும் சட்ட ஆலோசகராக இருக்கும்  வழக்கறிஞர் கையில் இருக்கும் நிதித்துறையில்   ஆயிரத்து நூற்றி 28வழக்குகளின்படி 68 ஆயிரத்து முன்னூற்றி 50கோடிகள் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் முந்தைய காங்கிரஸ் அரசில் பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடிகள் 5ஆண்டுகளில் ஆயிரத்து 331 வழக்குகளில்19ஆயிரத்து 113 கோடிகள் முறைகேடு செய்யப்பட்டுள்ளன.
மோடியின் ஆட்சியில்  கடந்த  ஆண்டுகளில் தனியார் துறை வங்கிகளில் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து27 வழக்குகளில் கூறும் ஆவணங்கள் தரும் தரவுப்படி,  ஆயிரத்து 774 கோடிகள் கடன் எனும் பேரால் சுருட்டப்பட்டுள்ளன. இவ்விதம் சுருட்டியவர்களில் பெரும்பாலானோர் வளர்ச்சி நாயகனின் சொந்த மாநிலமான  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உபரியான தகவல்.
 காங்கிரசின் கடைசி ஐந்துகால ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட 2005 வழக்குகளில் 2, 670 கோடிகள் மோசடி செய்யப்பட்டுள்ளன.
இங்கு தரப்பட்டுள்ள புள்ளிவிபரம் கூறும் தொகை யாவும் முந்தைய காங்கிரஸ்  ஆட்சியைவிட மும்மடங்கு ஆகும். உண்மையில் வளர்ச்சியின் நாயகனின் ஆட்சியில் எது வளர்ந்திருக்கிறது என்றால் , ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த நவீனக் கொள்ளைதான் வளர்ந்து இருக்கிறது.
காங்கிரசை மிஞ்சி சாதித்துக் காட்டுவோம் என மார்தட்டிய பாஜகவினர் செய்த சாதனைகளைப் பார்த்தால் சாதனை இல்லை; வேதனையே வேண்டிய அளவு இருக்கிறது.
(இறைவன் அருளால்  தொடரும்.)
ஆக்கம். இப்ராஹிம் அன்சாரி.  

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget