January 2019

சென்னையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரான மணிகண்டன் கடந்த 25-ஆம் தேதி, மறைமலை நகரில் ரயில் முன் பாய்ந்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். ரயில் ஏறியதால் மணிகண்டனின் தலையும், உடலும் துண்டானது. இது குறித்து விசாரணை நடத்த சென்னை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், சென்னை காவல்துறையினருக்கு எதிராக மனிகண்டன் அளித்திருந்த மரண வாக்குமூலம் சமூக வலைதளங்களில் இப்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் பயணியை காரில் ஏற்றிக்கொண்டு சென்ற போது, நடுவே இன்னொரு பயணியை ஏற்றுவதற்காக காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவர், தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தாம் தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார் மணிகண்டன்.

மலேசிய மன்னராக பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது கடந்த ஜனவரி 6-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா முடிசூட்டிக்கொண்டார். மலேசியா அரண்மனையில் பிரதமர் மஹாதிர் முகமது முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மலேசியாவில் மன்னர்களின் வேலை என்ன?
மலேசியாவில் 9 மாநிலங்களில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.  அந்த வகையில், பஹாங் மாநிலத்தின் தலைவரான 59 வயது சுல்தான் அப்துல்லா, புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பிலும், உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபாவிலும் உறுப்பினராக உள்ளார். மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் சுல்தான் பொறுப்பு வகித்துள்ளார்.  மலேசிய மன்னர் மற்றும் அவரின் குடும்பத்தின் செலவுகளுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8.6 கோடியை ஒதுக்க அந்நாட்டு  சட்டம் அனுமதி அளிக்கிறது. அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இத்தொகை இன்னும் மேலும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்களது பெயர் இடம் பெற்றிருக்கும். 

அதுசமயம் வரவுள்ள தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும். ஆனால், சில நேரங்களில் வாக்கு சாவடிக்குச் சென்ற பின்னர்தான் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலிலேயே பெயர் இல்லாததை வாக்களர்கள் அறிந்துகொள்வார்கள். 

உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் நேரம் நெருங்கும் முன்பே தெரிந்து கொள்வது அவசியம்.

எப்படி உங்கள் பெயர் அதில் உள்ளது என அறிந்து கொள்ள வேண்டுமா?

ஜனவரி 31ஆம் தேதியான இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இனையதளத்தில் வாக்காளர் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

1. National Voters' Service Portal (https://electoralsearch.in/) என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்.

2. அதில் உங்கள் பெயர், முகவரி போன்றவற்றை பதிவு செய்து, Search செய்ய வேண்டும்.

3. இதன் மூலம் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா இல்லையா என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.இதனையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.

ஜிந்த் தொகுதியில் பாஜக சார்பில் கிருஷ்ணா மித்தா, காங்கிரஸ் சார்பில் ரந்தீப் சர்ஜேவாலா மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் திக்விஜய் சவுத்தாலா ஆகியோர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் கீழுள்ள ராம்கர்-ல் காங்கிரஸ் சார்பில் சாபியா ஜுபைர் கான், பாஜக சார்பில் சுக்வந்த் சிங் ஆகியோர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மகன் ஜகத் சிங் இங்கு போட்டியிடுகிறார்.

இதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கிய முதல், ஜிந்த் சட்டசபை இடைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. திக்விஜய் சவுத்தாலா பாஜக வேட்பாளரை விட 1338 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 

இதனை தொடர்ந்து 3வது சுற்று இறுதியில், திக்விஜய் சவுத்தாலா, 11226 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாபளர் 9350 வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் 5813 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ராம்கார் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 16வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் கான் 63,906 வாக்குகள் பெற்று மேலும் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் சுக்வந்த் சிங் 47,254 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் கம்பீரமாக முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று  நடைபெற்றது.  பணிச்சுமை காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனான ரோகித் ஷர்மா இன்று கேப்டனாக செயல்பட்டார்.

மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னால் கேப்டன் தோனி கிடையாது. இதையடுத்து இந்திய அணியில் முதல் முறையாக போட்ஸ்மேன் 'சுப்மான் கில்' புதிதாக அணியில் சேர்க்கப்பட்டார்.

அவரின் முதல் போட்டியான இதில், நியூசிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சால், ஷிகர் தவான் (13 ரன்கள்), ரோகித் சர்மா (7 ரன்கள்),  அம்பத்தி ராயுடு (0) , தினேஷ் கார்த்திக் (0), சுப்மான் கில் (9 ரன்கள்) என முன்னணி பேட்ஸ்மேன்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 30 ரன்களை எட்டவில்லை. இந்திய அணியில் அதிகபட்சமாக சஹால் 18 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் பவுல்ட் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 

இதையடுத்து, 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இன்று மகாத்மா காந்தியின் 71ஆம் ஆண்டு நினைவு நாள். அவரை கொலை செய்தவர் நாதுராம் கோட்சே. அவர் தனது கையில் இஸ்மாயில் என பெயரில் பச்சைக்குத்தி காந்தியை கொலை செய்தார்.

பாஜக-வினர் எப்போதும் கோட்சே RSS அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று கூறுவதை பார்க்கலாம்.

ஆதவது அதன் உண்மை என்னவென்றால், நாதுராம் கோட்சேவுடைய தம்பியும்,காந்தியை கொலை செய்ய கோட்ஷே உடன் சதி செய்தவருமான ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்ஷே ஜனவரி 1994-ல் FRONTLINE இதழ் பேட்டியில் கூறியதாவது:

 "காந்தியின் கொலை வழக்கில் உள்ள  நான், நாதுராம், தட்டார்யா, கோவின்ந்  என எல்லோருமே RSS அமைப்பை சேர்ந்தவர்கள். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட அதிகமாக RSS-இல் தான் வளர்ந்தோம். RSS எங்களுக்கு குடும்பம் போன்றது. நாதுராம் கோட்சே பெரிய அறிவுமிக்கவராக இருந்தார். கோல்வார்க்கரும், RSS அமைப்பும் காந்தியின் கொலையால் நிறைய பிரச்சனைகள் உண்டாகக்கூடும் என்பதால் அவர் அமைப்பை விட்டு விலகுவதாக கூறினார். ஆனால் அவர் RSS-யை விட்டு விலகவே இல்லை.

இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு ''நான் ஏன் காந்தியை கொன்றேன்'' என்ற புத்தகத்தை எழுதி அவர் வெளியிட்டார். மேலும் RSS அமைப்புக்கும் காந்தியின் கொலைக்கும் தொடர்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியதற்கு கோப்பால் கோட்சே அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணிக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், சென்னையில் வாக்காளர் பட்டியல் விவரத்தை பகல் 12 மணிக்கு தேர்தல் அதிகாரி வெளியிடுவார் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல் அளித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதில் தமிழகத்தில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்த நிலையில் இன்று இரண்டாவது கட்ட ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மாலிக் பரோஸ்கான், மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்துவிட்டதாக தகவல் அளித்துள்ளார். 

மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், தலைமை தேர்தல் ஆணையம் கூறினால் இரண்டையும் சேர்த்து நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்றும், மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். 

ஜாக்டோ -ஜியோ, அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் வாபஸ் பெறுவதாக  சென்னை - திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஜன.22-ம் தேதி முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் முடங்கின.

இதையடுத்து தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இதனையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. எனவே நேற்று காலை முதல் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். 


மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார். 

இதனிடையே நேற்று ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 3520 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தகவல் அளித்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் வாபஸ் பெறுவதாக  அறிவித்துள்ளனர். 

அரசு ஊழியர் போராட்டம்: நீதிமன்றங்கள் நடுநிலை வகிக்க வேண்டும்! மிகவும் கீழ்நிலை வேலையாக இருந்தாலும், அரசாங்க வேலையே சிறப்பானது மற்றும் பாதுகாப்பானது என்று மக்கள் நினைப்பதற்குக் காரணம், அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு அரசு வழங்கிய ஓய்வூதியமும், அவர்கள் இறப்புக்குப் பின் அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு இறப்பு வரை வழங்கிய குடும்ப ஓய்வூதியமும்தான்.

‘ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் வாழ்வுரிமை என்றும், அவர்கள் செய்த பணியின் பொருட்டு அளிக்கப்படுவது என்றும், இதை ‘இனாம்’ என்று கருத முடியாது’ என்றும் உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. ஆனால், 01.04.2003 முதல் தமிழக அரசுப் பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

இப்போது நடக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தின் மையப் பிரச்சினை, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. இந்த நேரத்தில், போராடுபவர்கள் பணியை ஒழுங்காகச் செய்தனரா, இந்த அரசு குறையற்ற அரசா என்பது போன்ற பிரச்சினைகளுக்குள் செல்வது, எதிர்கொள்ளும் பிரச்சினையைத் திசை திருப்புவதாகும்.

தேர்தல் வாக்குறுதி

ஓய்வூதியத்தை மீட்பதற்காக இவர்கள் பல முறை போராடி வந்ததை ஒட்டி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின்போது, அவர் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உண்டு. சட்ட மன்றம் ஐந்து ஆண்டுகள் செயல்படாமல், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டுக் கலைக்கப்பட்டாலும், அப்போது சட்ட மன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் ஓய்வூதியம் உண்டு.

ஓய்வூதியம் வேண்டும் எனப் போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு, உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஓய்வூதியம் உண்டு. அவர்கள் 01.01.2016 முதல் திருத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட ஊதிய நிலுவைத் தொகையையும், ஓய்வூதியம் பெற்றவர்கள் ஓய்வூதிய நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொண்டார்கள்.

அரசின் கருவியல்ல நீதிமன்றம்

அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, மருத்துவர்களோ, போக்குவரத்துத் தொழிலாளர்களோ என எந்தப் பகுதி போராடினாலும், அப்போதெல்லாம் நீதிமன்றங்கள் அவர்களின் போராட்டத்தை, வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொள்ளும்படி உத்தரவிடுவது, அரசுக்கு ஆதரவான நிலையை நீதிமன்றம் எடுப்பதாகாதா? வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிடும் நீதிமன்றங்கள், பறிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உடனே அளிக்க வேண்டும் என்று ஏன் அரசுக்கு எந்த உத்தரவும் இடவில்லை?

போராடும் ஊழியர்களை எதிர்கொள்ள அரசுக்குப் போதுமான சட்டங்கள் இருக்கும்போது, அவற்றைப் பயன்படுத்தினால் மக்கள் மத்தியில் - குறிப்பாக போராடும் மக்கள் மத்தியில் - அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதாலும், அது எதிர்காலத் தேர்தலில் அரசுக்கு எதிராகப் போகும் என்பதாலும், அரசு பல தரப்பு நபர்கள் மூலம் வழக்குகளைப் போட்டு, நீதிமன்றத்தின் மூலம் அப்போராட்டங்களை எதிர்கொள்ள நினைக்கிறதோ என்கின்ற வலுவான ஐயம் எழுகிறது.

2003-ல் போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல லட்சம் பேரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘அத்தியாவசியப் பணி பராமரிப்புச் சட்ட’த்தின் கீழ் வேலைநீக்கம் செய்தது போன்ற பல அதிகாரங்கள் அரசிடம் இருக்கும்போது, போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை நீதிமன்றங்கள் எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்தால், அதில் தலையிடுமாறு போராடும் ஊழியர்கள் கோரினாலும், அதில் தலையிட நீதிமன்றங்கள் மறுத்து நடுநிலை வகிக்க வேண்டும்.

இது தொழிலாளர் பிரச்சினை

2003-ல் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பணித் தொடர்ச்சியுடன் வேலை கொடுத்தது மட்டுமன்றி, வேலை நிறுத்த நாட்களுக்கு ஊதியமும் கொடுத்துள்ளார். எனவே, இது முழுக்க முழுக்க அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என்பதும், அதில் எந்தத் தரப்பும் நீதிமன்றத்தைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்த நினைத்தால், அதை ஏற்க முடியாது என்பதும், இம்மாதிரி தருணங்களில் நடுநிலை வகிப்பதே நீதிமன்றங்கள் செய்ய வேண்டியது என்பதும் சரியான நிலையாக இருக்கும்.

ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்டாலொழிய ஊழியர்களின் போராட்டத்தில் தலையிடுவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். அப்படியின்றி வேலைநிறுத்தத்தில் தலையீடு செய்யமுற்பட்டால், நடுநிலையுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நீதிமன்றங்கள் உள்ளாகும்.

போராட்டங்களை எதிர்த்துப் போடப்படும் மிகப் பெரும்பான்மையான வழக்குகள் அரசியல் சார்பு கொண்டவை. அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன், கல்வி பாதிக்கப்படுவதாக வழக்கு போடுவதற்குப் பின்னால் உள்ள அரசியலைக் காணாமல் இருக்க முடியாது. ஒரு நீதிபதியிடம் போராட்டத்துக்கு எதிரான உத்தரவைப் பெற முடியவில்லை என்றால், மற்றொரு நீதிபதி முன் வேறொரு வழக்கைக் கொண்டுவருவது போன்ற முறைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலும் மிக மோசமானது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் முதல்வர் உடனே காலதாமதமின்றிப் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவை உண்டாக்குவதே சரியான தீர்வாகும்.

- து.அரிபரந்தாமன், நீதிபதி (ஓய்வு),
சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழக அரசு பள்ளிகளுக்கு சிறுபான்மையின அந்தஸ்து வழங்குவதற்கான விதிகளை வகுத்து 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசாணைப் பிறப்பித்தது.  சிறுபான்மையின மாணவர்களை 50% சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை பள்ளியென அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 140 கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் தகுதி உடைய சிறுபான்மையின மாணவர்களை  சேர்க்க மறுக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி சிறுபான்மையின ஆணைத்தில் புகாரளிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

ஆசியக் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டம் அபுதாபியின் முகமது பின் சையீத் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து கத்தார் அணி விளையாடியது. 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது. கத்தாரிடம் ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வியை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் விரக்தியால் காலி தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை கத்தார் வீரர்கள் மீது வீசியுள்ளனர். இதனைத்தொடர்ந்து விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கத்தார் அணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

வெற்றிபெற்ற கத்தார் அணி, நாளை மறுநாள் ஆசியக் கால்பந்து இறுதி போட்டியில் ஜப்பான் அணியை எதிர்க்கொள்ள  உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடனே, விவசாயிகள் பயிர் கடங்கள் தள்ளுபடி செய்துள்ளோம். அதை போலவே வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செய்த தவறுகளை நாங்கள் நிச்சயம் சரிசெய்வோம்.

இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நிச்சயம் உருவாக்கி தருவதாக தெரிவித்தார். ஆனால் அவர் இன்று வரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி பொய் பேசியே வீணடித்து விட்டார்.

என்று ராகுல் காந்தி பேசினார்.

போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் அவர்களின் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

9 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்களை காலிப்பணியிடம் என அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் வரும் 30ஆம் தேதி ஆசிரியர்களுக்கு வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. போராடிய நாட்களுக்கு சம்பளம் இல்லை. மேலும் சனி, ஞாயிற்று கிழமையும் சம்பளம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா முதலமைச்சருமான மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவாவில் தனிப்பட்ட முறையில் தனது தாயார் சோனியா காந்தியுடன் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை இன்று தலைமை செயலகத்தில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் அவரது உடல் நலம் பற்றி ராகுல் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ரஃபேல் மோசடி தொடர்பான ரகசியங்கள் முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

விவாத மனநோயாளிகளாகி வருகிறார்களா மக்கள்!
இந்த காலத்தில் எதையும் விமர்சனம் செய்யும், விவாதம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு தீர்வை நோக்கிய கலந்தாலோசனையை கூட விவாத கண்ணோட்டத்துடன் அனுகும் மனோநிலைக்கு இன்றையவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு ஊடகங்களில் தொட்டதற்கெல்லாம் நடத்தப்படும் விவாதங்களும், சமூக வலைதளங்களின் தாக்கமும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
அனைத்தையும் தெரிந்தவர் என யாரும் இல்லை. எனவே கலந்தாலோசிப்பதன் மூலம் பலரது கருத்துக்கள் அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் தீர்க்கமான நல்ல முடிவை தீர்வை எடுக்க முடியும். சகிப்புத்தன்மை, பண்முகத்தன்மை, ஒற்றுமை, மேலாண்மை திறன் போன்றவை அதிகரிக்கும். ஆனால், விவாதம் என்பது தீர்வை நோக்கியதாக இல்லை. விவாதத்தில் பங்கேற்கும் நபர்களின் பேச்சாற்றலை நிரூபிக்கும் களமாக அமைகிறது. தங்கள் பேச்சாற்றலை நிரூபிக்க, எதிர் கருத்தாளரை பேச விடாமல் தடுக்க பல தவறான அனுகுமுறைகளை விவாதத்தில் ஈடுபடுபவர்கள் கையாளுகின்றனர். அதாவது நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்பதை காட்டும் களங்களாக மாறி தனிப்பட்ட தாக்குதல்களுக்கு வித்திடுகின்றன.
விவாதம் முடிந்தாலும் இருவர் மத்தியில் குரோத போக்கு அதிகரிக்கவே செய்கிறது. சமூக வலைதள விவாதங்களால் வெட்டுக்குத்து நடந்த சம்பவங்களும் இங்கு உண்டு. கொள்கை சார்ந்த விசயம் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருக்கும் போது அதை விவாத கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ளும் மற்றொரு நபர் முட்டாள்தனமான கேள்விகளை, தனிப்பட்ட முறையிலான கேள்விகளை எழுப்பி அவரை மடக்க நினைக்கின்றனர். ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும் இருவர் அதற்காக வெவ்வேறு வழிமுறைகள் கையாளுவர். இருவரும் சேர்ந்து அந்த இலக்கை அடைய முயலும்போது அவர்கள் கலந்தாலோசித்தலே தீர்வை தரும். மாறாக இருவரும் விவாதம் செய்தால் ஒரு கழன்றுகொண்டு சென்றுவிடுவார்.

நான் பார்த்தவரை பல விருந்தினர்கள் பங்கேற்கும் எந்த ஒரு ஊடக விவாதமும் மக்களுக்கு ஒரு தீர்வை, தெளிவான புரிதலை கொடுப்பதில்லை. தனிநபரிடம் நடத்தப்படும் நேர்காணல்களில், நெறியாளராக இருப்பவர் தனது சாதுர்யமான கேள்விகளால் விருந்தினரிடம் தக்க பதில்களை பெற்றுத்தர வேண்டும். அது தான் மக்களுக்கு பயனளிக்கும். ஆனால், மக்களே இத்தகைய விரும்புவதில்லை என்பது சாபக்கேடு.
முதல்வன் பட அர்ஜுன் போல், ரங்கராஜ் பாண்டேவை போல், அர்ணாப் கோஸ்வாமியை போல் எதிரில் அமர்ந்திருப்பவரை பதில் சொல்ல விடாமல் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். பதில் சொல்ல முடியாத நியாயமான கேள்விகளை கேட்பதில் தவறில்லை. ஆனால், இந்த கேள்வியை கேட்டு மடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதையே குறிக்கோளாக கொண்டு கேள்விகளை தயாரிப்பது நிச்சயம் டி.ஆர்.பிக்காக மட்டுமே அன்றி பதிலுக்காக, தீர்வுக்காக அல்ல. மக்கள் மத்தியிலும் இது போன்ற ஒரு மன நோய் போல அதிகம் பரவி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது.

ஆஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெறும் ஆண்கள், பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று வெளியிட்டுள்ளது.
ஒரே ஆண்டில், ஒரே நாட்டில் ஆடவர், மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடப்பது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும்.
ஆடவர் பிரிவு டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அக்டோபர் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை லீக் சுற்றுப்போட்டிகள் நடக்கின்றன.
நவம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், 15ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 45 போட்டிகள் நடக்கின்றன, 16 அணிகள் பங்கேற்கின்றன. 7 நகரங்களில், 7 இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
ஆடவர் இந்திய அணி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குரூப்-2வில் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணியோடு, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் 2அணிகள் இடம் பெறுகின்றன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் களமாடுகிறது இந்திய அணி.
குருப்-1
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் அணி, பி பிரிவில் 2-ம் அணி
குரூப்-2
இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தகுதிச்சுற்றில் பி பிரிவில் முதல் அணி, ஏ பிரிவில் 2-ம் அணி
குரூப்-1ல் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் இரு அணிகள் ஆகியவை இடம் பெறுகின்றன.
தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் குரூப் ஸ்டேஜ் ஆட்டங்கள் 2020 அக்டோபர் 24ஆம் தேதி தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது. நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி அக்டோபர் 25ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணி மோதும் லீக் போட்டிகள் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1.    2020ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி பெர்தில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதுகிறது.
2.   29ஆம் தேதி தகுதிச்சுற்றில் ஏ பிரில் 2ஆம் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இது மெல்போர்னில் நடக்கிறது.
3.    நவம்பர் 1ஆம் தேதி மெல்போர்னில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.
4.    நவம்பர் 5ஆம் தேதி அடிலெய்டில் நடக்கும் ஆட்டத்தில் பி பிரிவில் முதல் அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
5.   நவம்பர் 8-ம் தேதி சிட்னியில் நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

பிரதமர் நரேந்திர் மோடி ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி  தமிழகம் வைக்கிறார்.

கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது:

தமிழ்நாடு முன்னேறுவதற்காக பிரதமர் மோடி ஆட்சியில் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரையில் மத்திய அரசு நிதியில் இருந்து பல கோடி ரூபாய் செலவில் இரண்டு நாட்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் கூட பல்நோக்கு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகிற திருப்பூருக்கு 10ஆம் தேதியும், கன்னியாகுமரிக்கு 19ஆம் தேதியும் வருகைத்தர உள்ளார். அவரின் வருகையின் போது பல வகையான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான விழா நடைபெறுவதற்க்குரிய இடத்தையும் நாங்கள் தேர்வு செய்ய உள்ளோம்.

மேலும் கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை மோடி செயல்படுத்த உள்ளார். அத்திட்டங்களை தொடங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் விழா நடத்தப்படம் என அவர் கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ராஸ் டெய்லர் 93 ரன்களை குவித்தார். இந்திய வீரர் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், சாஹல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்தியா 43 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரோகித் சர்மா 62 ரன்களும், ஷிகர் தவான் 28 ரன்களும், விராட் கோலி 60 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அம்பாதி ராயுடு 40 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக பந்து வீசிய முகம்மது சமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் ஒரு நாள் போட்டியிலும் முகம்மது சமிதான் ஆட்ட நாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பணம் கேட்டு மிரட்டியதாக சார்லி சாப்ளின் 2 பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ப்ளூ சட்டை மாறன் என்பவர் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். பெரும்பாலான இவரது விமர்சனங்களில் சினிமாக்களையும், இயக்குநர்களை, நடிகர்களை இழிவுபடுத்தி பேசுவது வாடிக்கையாக இருக்கும். இந்த நிலையில், இவர் அண்மையில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் சிவா ஆகியோர் மாறன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் சக்தி சிதம்பரம் ப்ளூ சட்டை மாறன் தன்னிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதாகவும், கொடுக்க மறுத்ததால் படத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார். தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலை முடக்கி ப்ளூ சட்டை மாறன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக அமைத்துள்ள குழுக்களில் தான் இடம்பெறவில்லை என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், இந்த மூன்று குழுக்களிலும் தான் இடம் பெறவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம் என குறிப்பிட்டுள்ள அவர், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றப் தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை நியமித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதிவியை ராஜினாமா செய்து தனி அணியாக செயல்பட்டபோது மைத்ரேயன் அவரது அணியில் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மைத்ரேயனின் பதிவு:

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை.
கழகத்தில் நான் 1999 ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை சேர்த்து இருந்தார்கள்.
2009 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன்.
2009 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மாநில, தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி " வளமான இந்தியாவிற்கான செயல் திட்டம் - An Agenda For A Better India " என்ற தலைப்பில் அந்த தேர்தல் அறிக்கை தயாரானது.

அம்மா அவர்கள் 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார்.
அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்மா அவர்கள் திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் அன்றைய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்தல் அறிக்கையின் விவரங்களை ஸ்லைடுகள் மூலம் Power point presentation ஆக விளக்க வேண்டும். ஜெயா டிவியின் செய்தி ஆசிரியர் திரு.சுனில் செய்யலாம் என்று அம்மா அவர்களிடம் கூறியபோது, " இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான் சரியாக இருக்கும் "என்று அம்மா உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது. நானும் ஒரு மணிக்கும் மேலாக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். நான் அறிந்த வரை ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஸ்லைடுகள் மூலம் Power point presentation செய்தது அதுதான் முதல் தடவை.

அடுத்த நாள் காலை அம்மா அவர்கள் கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான நிலையத்தில் கழகத்தின் தலைவர்கள் நின்று அம்மா அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நானும் தான். புன்னகையோடு அம்மா அவர்களும் ஏற்றுக்கொண்ட பிறகு அம்மாவின் கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார்.
" மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் " என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி சென்றார்கள்.
இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும்.
Image may contain: 7 people, people smiling


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் அனைவருக்கும் சம்பளம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் வறுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது புதிய இந்தியாவை உருவாக்க முடியாது என்றார். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், குறைந்தபட்ச வருமானத்தை அனைத்தும் ஏழைகளுக்கும் உறுதி செய்வோம் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களும் சராசரி வருமானத்தை பெறுவார்கள் என கூறிய அவர், இதனால் நாட்டில் பசி, வறுமை ஒழியும் என்றார். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டத்தை நிறைவேற்றப்போவதாக அவர் உறுதியளித்தார். பல்வேறு வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள இந்த திட்டம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டால், விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் அதிகம் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிக விருவிருப்பாக  நடைபெற்றுவருகிறது.  
வரக்கூடிய மார்ச் மாதம் ரயில் சேவை துவங்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் -  திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை திட்டத்தில் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரையிலான 122 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை  அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 
அதன் பின் சில ஆண்டுகளுக்குப்பின் இதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது.  இந்த அகல ரயில்பாதை திட்டம் மிகவும் தாமதமாக நடைபெற்றுவந்த நிலையில் ஒரு வழியாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான 72 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரையிலான இத்திட்டம் திறுத்தி போடப்பட்ட நிலையில் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்காகவே ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
அதன்படி பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் வரை ஒரு பிரிவாகவும், தில்லை விளாகத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ஒரு பிரிவாகவும், திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை மற்றொரு பிரிவாகவும்  என மூன்று பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை 26 கிமீ தூரத்தில் திருநெல்லிக் காவல் வரையில் 15 கிமீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கப்பட்டு திருநெல்லிக்காவல் வரை நடைபெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 26ம்தேதி திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான 25 கிமீ அகலரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் என்ஜின் சோதனை ஒட்டம் நடைபெற்றது. 

அதன்பிறகு ரயில்வே  நிலைய கட்டிடங்கள், பிளாட்பார்ம்கள், எலக்ட்ரிக்கல் பணிகள், ரயில் நிலையநடை மேம்பாலம், ரயில்வே கேட் அருகில் சிக்னல் அமைக்கும் பணி போன்ற வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அடுத்த மாதம், பிப்ரவரி மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற உள்ளது. அதேபோன்று திருத்துறைப் பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை வரை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிஆர்எஸ் (கமிஷன் ஆப் ரயில்வே சேப்டி) அனுமதி  கிடைத்த பிறகு வரும் மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளது.ரயில் சேவைஎப்போது துவங்கும் என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை எண் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு கூடங்கள் மூடப்படுவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் , 7 வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரயில் நிலையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கைது நடவடிக்கைகள் மூலம் தங்களது போராட்டத்தை நீர்த்து போக செய்ய முடியாது என அப்போது முழக்கங்களை எழுப்பிய அரசு ஊழியர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தூரன், அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடவில்லை எனவும் தங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தியே போராட்டம் நடைபெறுவதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்களை பெறுவதின் மூலம் அரசு பட்டதாரி இளைஞர்களை கேவலப்படுத்துவதாகவும், தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறித்தி தங்களுடன் இணைந்து பட்டதாரிகளும் போராட வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறித்தினார். இதை அடுத்து மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் மாதாபுராவில் இந்து அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கைகளை வெட்டுங்கள் என்று பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது.

இந்து பெண்களின் உடல் மீது யாராவது கை வைத்தால் அவர்களின் கைகளை உடலில் ஒட்டியிருக்காத நிலையில் வெட்டி விடுங்கள். துரோகிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் அவர்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்றும் அனந்தகுமார் கட்டளையிட்டார். அனந்தகுமாரின் இந்த பேச்சு வைரலானதால் அவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அனந்தகுமாரின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. உக்ரப்பா, அனந்தகுமாரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக கர்நாடக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் மதுசூதணன் கூறியதாவது அனந்தகுமாரின் பேச்சு முற்றிலும் தவறானது, அவரின் பேச்சை ஒருபோதும் பாஜக நியாயப்படுத்தாது என்றார். 


1876 களில் தமிழகம் கடும் வறட்சியில் வாடிய காலம். பஞ்சம் தலைவிரித்து ஆட லட்சக்கணக்கானோர் பசிக்கொடுமையால் மண்ணுக்கு இறையாயினர். சப்தமே இல்லாமல் நிகழ்ந்த மாபெரும் அழிவு. வறட்சி காலத்தில் ஒரு பக்கம் சாரை சாரையாக மக்கள் செத்து விழுந்து கொண்டிருக்க தென் மேற்கு பகுதிகளில் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய வௌள நீர் மக்களை மூழ்கடித்தது.

ஒரு பக்கம் வறட்சி இன்னொரு பக்கம் வௌளநீர். இது இரண்டையும் சமாளிக்க அப்போதைய பிரிடிஷ் அரசாங்கம் தீவிரமாக மண்டையை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தது. தென்னிந்தியாவின் பிரச்சனைகள் லண்டன் பத்திரிக்கைகளை நிரப்பின. விமர்சனங்களால் செய்வதறியாது விக்கித் திணறியது ஆங்கிலேயே அரசு.
ஒரு வழியாக நீண்ட போராட்டத்திற்கு பின் 1882 ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது.

அணை கட்டும் பொறுப்பு பொறியாளர் ஜான் பென்னிக்குவிக்கிற்கு வழங்கப்பட்டது.
எழுத்துக்களால் விவரிக்க முடியாத ஓர் உச்ச கட்ட புராஜக்ட் அது. இன்றையை நவீன கால தொழில்நுட்பத்தை வைத்து கூட அதனை எளிதில் செய்து விட முடியாது..! ஆம் மேற்கு திசையில் ஓடி அரபிக் கடலில் வீணாக உப்புநீராக கலக்கும் அந்த ஆற்றை கிழக்கு பக்கமாக திருப்பி விட்டு வங்கக்கடலில் சேர்க்க வேண்டும்.. சேர்த்தால்..? சேர்த்தால் போதும்..! வழியில் இருக்கும் அத்தனை ஊர்களும் செழிக்கும்..

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்டங்கள் 244 கிலோ மீட்டர் ஓடி காலா காலத்துக்கும் பல கோடி மக்களின் தாகத்தை தீர்க்கும்..!
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. நீர் வழித்தடம் இல்லாததால் மலைகளை குடய வேண்டும். மலைகளை குடைவது,அதுவும் அந்த காலத்தில் செய்யமுடியாத காரியம். பல கட்ட உழைப்புக்கு பின் ஒரு வழியாக மலையை குடைந்து பாதையும் அமைக்கப்பட்டது.  இன்று சொகுசாக தேக்கடியில் படகு சவாரி செய்ய காரணம் பென்னிகுவிக் அன்றைக்கு தண்ணீரை திருப்பிவிட்டது தான்..

நீண்ட திட்டமிடுத்தலுக்குப் பிறகு செப்டம்பர் 1887 பொறியாளர் பென்னிகுவிக் 3000 தொழிலாளர்களுடன்  அணை கட்ட களத்தில் இறங்கினார்.175 அடி உயரத்துக்கு அணை எழுப்ப வேண்டும். வெளி உலகத்துடன் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடியாது. அடர்ந்த வனம்,கடும் குளிர், சில நேரங்களில் தொடர் மழை, அதன் காரணமாக பரவிய காலரா, மலேரியா போன்ற நோய்கள். அது போக யானை, கரடி, புலி, பாம்பு உள்ளிட்ட உயிர் கொல்லிகள் என பெரும் சவால்களுக்கு மத்தியில் மும்முரமாக நடைபெற்றது அணை கட்டும் வேலை.  

இக்கடும் சவால்களை சந்திக்க முடியாமல் பலர் இறந்து போயினர்.  ஒரு நாள் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளம் நிச்சயம் அங்குள்ளவர்களுக்கு நெஞ்சு வழியை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அதற்குக் காரணம் பாதி அளவு கட்டப்பட்ட அணை தரமட்டமாகி பென்னிக்குவிக்கின் தலையில் இடியாய் விழுந்தது. கொத்து கொத்தாக மக்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.   நீண்ட நாள் கனவு ஒரேயொரு மழையால் அடையாளமின்றி அழிக்கப்பட்டது.
செய்வதறியாது திகைத்து நின்றனர் தமிழர்கள்.. 

கடும் துயரத்திற்கு ஆளான பென்னிகுவிக்கின் இடத்தில் ஓர் சாமானியன் இருந்திருந்தால் தன்னை தானே நொந்துகொண்டு தூக்கில் தொங்கியிருப்பான். ஆனால் பென்னிக்குவிக் ஓர் அதிசயப் பிறவி. உடனே அவர் மெட்ராஸ் புறப்பட்டு வந்து தனது அதிகாரிகளிடம் நடந்ததை விவரித்தார். புரிந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு பென்னிக்குவிக் வில்லனாக தெரிந்தார். மீண்டும் நிதி வரவழைத்து அணை கட்ட முயற்சிப்போம் என பென்னிகுவிக் மனம் தளராமல் உதிர்த்த வார்த்தைகளை எள்ளி நகையாடி பைத்தியக்கார பட்டம் சூட்டினர் ஆங்கிலேயர்கள். 

கண்ணெதிரே உயிரை விட்ட பெயர் தெரியாத ஆயிரம் தமிழர்களுக்காக தலையை அடமானம் வைத்தாவது மீண்டும் கம்பீரத்துடன் அணையை எழுப்ப வேண்டும் என முடிவெடுத்தார் பென்னிக்குவிக். அதற்காகவே வேகமாக
இங்கிலாந்து பறந்தார். தன்னிடம் இருந்த சொத்துக்களை விற்றார். (ஒரு சில ஆய்வில் தனது படுக்கை மெத்தையையும் விற்றதாக உள்ளது) ஓரளவு பணம் தேரியதும் மீண்டும் அணையை கட்ட திட்டமிட தொடங்கினார். இந்த முறை இயற்கையிடம் தோற்று விட கூடாது என மனதில் தீராத வெறி இருந்தது. ஆம் உண்மையில் அது இயற்கைக்கும் பென்னிகுவிக்குமான பலப்பரீட்சை அது.!

பருவ மாற்றங்கள் அறிந்து வேலையை செய்யத்தொடங்கினார் பென்னிக்குவிக். அவரது போராட்ட குணம் வீரத்தமிழர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. படிக்காதவர்களாக இருந்தாலும் முடிந்தளவு உயிரை மாய்த்தாவது எதிர்கால சந்ததிகளுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பை கொட்டினார். கரம் கோர்த்து வேலை செய்தனர்.மெல்ல மெல்ல அணை எழும்பியது. இம்முறை வெள்ளம் வந்தால் மனித கேடயமாக மாறுவதற்கு கூட எம்மக்கள் தயங்கவில்லை.

8 வருட கால நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக 1895 ஆம் ஆண்டு கம்பீரமாக எழுந்து நின்றது முல்லைப் பெரியாறு அணை..! அதை பார்த்து பார்த்து தேம்பி அழுதார் பென்னிகுவிக்.. விடா முயற்சிக்கும் தீராத போராட்ட குணத்துக்கும் கிடைத்த ஓர் மாபெரும் வெற்றி.. தனது திட்டம் நிறைவேறி தமிழகம் செழிக்க வேண்டும் என்பதற்காக போராடிய அவரது முயற்சிக்கு வெகு விரைவிலேயே பலன் கிடைத்தது. இன்று வரை எண்ணிலடங்கா மக்கள் அவர் திருப்பிய தண்ணீரை அருந்தி விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். தேனி சுற்று வட்டார பகுதிகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல பேருடைய பெயர்கள் பென்னிகுவிக் என்று தான் சூட்டப்பட்டுள்ளது. ஆம் அணை கட்டிய அன்றில் இருந்து இன்று வரை பென்னிக்குவிக் தான் அவர்களின் மாபெரும் சரித்திர நாயகன்..!!

(ஜனவரி 15 நேற்று முன்தினம் அவரது 148 ஆவது பிறந்தநாள். தேனியில் அவரது பிறந்தநாளை விழா நடத்தி கொண்டாடியதாக செய்தி கிடைத்தது. அவரை தேட முயற்சித்தேன்.அவரது போராட்ட வாழ்வு கண்களில் நீரையே தேங்க வைத்து விட்டது. பென்னிக்குவிக் ஓர் inspiration..! )

~ அஷ்பாக் அஹமத்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் ஒரு வகையான பொருளாதார மந்த நிலையல்ல பொருளாதாரம் இயங்காத, அச்சமூட்டுகின்ற நிச்சயமற்ற தன்மை, அன்றாடம் கூடிக்கொண்டு இருக்கும் எண்ணெய் விலை, மதிப்பிழக்கும் நாட்டின் செலவாணி, வீழ்ச்சியடையும் முதலீடுகள், பதட்டமான சூழலில் பணியாற்றும் வங்கித்துறைகள் ஆகிய  காரணிகள் இந்தியப் பொருளாதரத்தை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் தள்ளி இருக்கின்றன.

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் பங்குகொள்ளும் நகைச்சுவைக் காட்சியில் ஒரு மனிதனுக்கு கண் சரியாகத்தெரியாது, காது கேட்காது, காலில் ஆணி, கையில் வாதம், புட்டத்தில் மூலம், உள் மூலம் ,வெளிமூலம் ஆகிய அனைத்துவியாதிகளும் இருப்பது போல இந்த நாலரைஆண்டுக் காலத்தில் இந்தியப் பொருளாதாரத்துக்கு இவ்வளவு வியாதிகளும் ஏற்பட்டுவிட்டது. இவற்றில் பல வியாதிகள் தொத்து வியாதிகள்; சில வியாதிகள் தவறான  மருந்தை உட்கொண்டதால் ஏற்பட்ட வியாதிகள்.

 சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதார சுனாமியிலும் தொடர்ந்து அச்சமூட்டும்  உள்நாட்டுப் பொருளாதார சூறாவளியிலும் சிக்கி இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு ஆகிய பிரச்சனைகளுடன் Infrastructure Leasing & Financial Services (IL&FS) அமைப்பில் எழுந்துள்ள சிக்கல், இந்தியா மீதான நாணயம், நம்பிக்கை ஆகிய அடிப்படைத்தன்மைகளின் மீது கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

 (IL&FS) ல் எழுந்துள்ள சிக்கலுக்குப் பிறகு நாட்டின் நிதியமைச்சரை சந்தித்து விளக்கம் பெற, மும்பையைச்  சேர்ந்த முதலீட்டாளர்களின் அமைப்பு புது டில்லிக்குப் படையெடுத்தது. ( IL&FS) என்பது ஒரு அரசு பெற்றெடுத்த  நிறுவனம்.  ஆனால் அந்த நிதி நிறுவனத்துக்கு யாரை, எதற்காக , ஏன் நம்ப  வேண்டும் என்ற அடிப்படை பயிற்சி இல்லை. வழக்கமாக பதினன்ந்து நிமிடங்கள் ஒரு வாடிக்கையாளரிடம் பேசுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் நிதிநிறுவனங்களை சந்திப்பதற்காக வரும் சிறு முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்த, வாக்குறுதிகளை உறுதிப் படுத்த நீண்ட  நேரம் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க  வேண்டி இருக்கிறது என்று ஒரு பெரும் முதலீட்டாளர் அலுத்துக் கொள்கிறார். இந்தியா  இந்தச்சூழலில், பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தீயை அணைக்க போரிடும் அவசர நிலையில் போராடுவது போல நிலையில் இருக்கிறது என்கிறார். இதன்காரணமாக, எதிர் வரும் தேர்தலுக்கு முன்பாக மக்களின் நம்பிக்கையை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பதே அரசின்  கவலையாக இருக்கிறது.

பல அமைப்புகளின் கோரிக்கைகளுக்குப் பிறகு நின்று உட்கார்ந்து எழுந்து மாநிலத்தேர்தல்களை மனதில் வைத்து  எண்ணெய் விலையின் உற்பத்தி வரியில் மத்திய அரசின் சார்பாக சிறு சலுகையை அறிவித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அரசின் பொருளாதாரத்திட்டங்கள காக்கைக்கும் தன் குஞ்சு போன் குஞ்சு என்ற அடிப்படையில் தற்காத்துப்  பேசினார். அப்போது எந்த அரசும் தனது மக்களின் நலனை கவனிக்காமல் இருக்க இயலாது என்று உதட்டளவு பேசினார். கடந்த நான்கு நிதிநிலை அறிக்கைகளில் வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்களுக்காக நேரடி வரிகளில் சில சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்ததை மறுக்க இயலாது. அதே போல எண்ணெய் விலை வரம்பின்றி ஏறிக்கொண்டிருக்கும் வேளையில் நிதியமைச்சர் அறிவித்த  இரண்டு ரூபாய் சலுகை , யானைப்பசிக்கு சோளப் பொறி என்ற நிலையில் மட்டுமல்லாமல் நிதியமைச்சர் முன்வைத்த மாநிலங்களும் இந்த விலைகுறைப்பில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற  கோரிக்கை பாஜக மாறும் அதன் கூட்டணிக் காட்சிகள் ஆளும் மாநிலங்களில் தவிர வேறு மாநிலங்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

அரசின் அந்த விலைக் குறைப்பாவது பொருளாதாரரீதியில்  அறிவு பூர்வமானதா ? என்று கேள்வியெழுப்பினால் இல்லை என்ற பொருளியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பொருளியல் வல்லுனர்கள் , நிதியமைச்சர் அறிவித்த விலைக்குறைப்பு பொருளாதார் ரீதியாக ஒரு தவறான  காய் நகர்த்தல் என்று கூறுகிறார்கள்.  

இவ்வாறு தவறான காய் நகர்த்தல் என்று கூறப்படுவதற்கு காரணமாக அவர்கள் குறிப்பிடுவது இந்த விலைக்குறைப்பு எண்ணெயின் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்குRs 1,40,000 கோடியும் அரசுக்கு Rs. 70,000 – 80,000கோடியும் அரசும் பங்குதாரராக இருப்பாதால் இழப்பை ஏற்படுத்தும் என்று கணக்கிடுகிறார்கள். இந்த உற்பத்திவரிக் குறைப்பினால்  அரசு தனது வருவாயிலிருந்து வருமானத்தை இழக்கிறது.  இந்தக் கருத்தை  சிடி பேங்க் உடைய பொருளியல் குறிப்பு சுட்டிக் காட்டுகிறது.

பொருளாதாரக் கப்பல் நடுக்கடலில் தள்ளாடிக் கொண்டு இருக்கும்போது அதை எந்த திசையில் செலுத்த வேண்டும் என்கிற கொள்கை முடிவுகளில் அரசுத்துறைகளின் நிதி அமைச்சகத்துக்கும் மத்திய வங்கிக்கும் இருக்க வேண்டிய ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் இல்லாமல் போய்விட்டதாக இந்த நிலை விமர்சிக்கப் படுகிறது.இத்தகைய நிர்வாக முடிவு வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்துவதற்கோ  நாட்டை விட்டு புறமுதுகிட்டு ஓடும் முதலீடுகளை திருப்பிக் கொண்டு வருவதற்கோ ஒரு வகையிலும் உதவாது. மாறாக, அழுத்தத்தைக் குறைப்பது என்ற பெயரில் எடுக்கப்பட்ட  அந்த நடவடிக்கை, நிதி மற்றும் எண்ணெய் துறைகளில் இப்போது இருக்கும் அழுத்தத்தை கூட்டுவதற்கே உதவும் என்று IMF & World Bank  நிறுவனங்களின் பொருளியல் துறையின் செயலாளர் திரு. சுபாஷ் கர்க்பாலித்தீவில் நடைபெற்ற ஒரு வருடாந்திரக் கூட்டத்தில் கூறுகிறார்.    ( Ref: India To-day )

எண்ணெய் விலைக்குறைப்பு என்கிற  ஊருக்கு உதவாத நாடகத்தின் காட்சிகளால் நாட்டுக்கு நன்மை ஏதும் இல்லை என்பதே நாம் உணர வேண்டியது. பல மாநிலங்கள் இந்த விலைக்குறைப்பை சீண்டக்கூடத் தயாராகவில்லை என்பது மத்திய நிதி அமைச்சருக்கும் அவரை வைத்து வேலை வாங்கும் பிரதமருக்கும் பெரும் அவமானமாகும்.

அரசுத்துறை வங்கிகளின் நிலை என்ன?

( தொடரும்) 

ஆக்கம்: இப்ராஹிம் அன்சாரி

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி தற்போது தமிழகம் வந்தார். தற்போது இவர் கேர்ளாவில் நடக்கும் விழாவிற்காக கேரளா சென்றுள்ளார்.
தமிழகம் வந்த மோடிக்கு எதிராக #GoBackModi டேக் உருவாக்கப்பட்டு வைரலானது. தற்போது இதை உலக அளவில் டிரெண்டாகி உள்ளது.
பிரதமர் மோடி தமிழகத்தில் நடந்த விழாவை முடித்துக்கொண்ட தற்போது கேரளா சென்று இருக்கிறார். கேரளாவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய சேமிப்பு கூடத்தை திறக்கவும், கட்சியினர் மத்தியில் உரையாடவும் மோடி கேரளா சென்று இருக்கிறார். தமிழகத்தில் இருந்து நேரடியாக அவர் கேரளா சென்றார்.
தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு நிலவியது போலவே கேரளாவிலும் மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. கேரளாவில் மோடிக்கு எதிராக #PoMoneModi போ மோனே மோடி என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை போலவே அங்கும் இது வைரலாகி உள்ளது.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget