மோடி ஊழலை ஒழித்தாரா? தொடர் (பகுதி-3)

பொருளாதாரம்,  அதிலும் குறிப்பாக வங்கிப் பொருளாதாரம் என்கிற  பாடம் படித்தவர்களுக்கு நல்ல  கடன் எது கெட்ட கடன் எது என்பது பற்றித்  தெரியும். 

நல்ல கடன் என்பது கடன் வாங்கும் முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட மாத தவணைகளில் ஒழுங்காக கடனைத் திருப்பிக் கட்டுவதாகும். கெட்ட கடன் ( Bad Debts) என்பது விஜய் மல்லையா போன்ற நல்லய்யாக்கள் போட்ட பட்டை நாமம் பற்றியதாகும். இதை வராக்கடன் என்றும் சொல்வதுண்டு. இவ்வாறு, வங்கிகள் கொடுத்த கடன் திரும்ப வராது என்று எதிர்பார்த்தே வங்கிகள்  தங்களது ஆண்டு வரவு செலவில் இந்த இழப்பை ஈடு செய்வதற்காக ஒரு தொகையை ஒதுக்கி வைப்பதும்( Reserve for Bad Debts)  நடைமுறை வாடிக்கை.

உள்நாட்டு வங்கி வர்த்தகத்தில் , அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு , இவ்வாறு வராக்கடன் மூலமாக எழுந்த பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கின்றன. இந்த வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் என்பதும் , இவ்வாறு வராக்கடன் வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடியோர் அரசை ஆள்பவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதும் , இவ்வாறு ஓடியவர்களில் சிலர் நாட்டின் நிதியமைச்சரைப் பார்த்து அவரிடம் பயணம் சொல்லிவிட்டு பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் என்பதும் நமக்கு பல கதைகளைச் சொல்கின்றன.

இவ்வாறு ஓடிப்போனவர்கள் இந்த நாட்டில் விட்டுவிட்டு அல்லது பிணையாக  வைத்துவிட்டுப் போன சொத்துக்களை அரசு வங்கிகள் தங்களது உடமைகளாக்கி தங்களின் கடனை ஓரளவுக்காவது வசூலித்துக் கொள்ள சரியான சட்ட நடவடிக்கைகளை  பொருத்தமாக மேற்கொள்ளவில்லை .

அதுமட்டுமல்லாமல் நிழல் நிதி நிறுவனங்களாக செயல்படும் NBFC என்று சொல்லப்படுகிற Non Banking Finacial Company கள் இந்தத் தொடரின் முதல் பாகத்தில் குறிப்பிட்டபடி IL& FS ல் ஏற்பட்ட  வீழ்ச்சியின் காரணமாக 91,000 கோடி ரூபாய் கடன் இழப்பையும் , நிறைவேறிக்கொண்டிருந்த தொழில் முதலீட்டுத்திட்டங்கள் பாதியோடு நிற்கும் நிலையாலும், பல திட்டங்கள் அடியோடு கைவிடப்பட்ட காரணங்களாலும்   , தாமதிக்கப்பட்ட  நிலையாலும் , நடக்கும் திட்டங்களால் இலாபம் குறைவாக கிடைப்பதாலும் நிலைகுலைந்து நிற்கிறது.


இத்தகைய பற்றி எரிகிற கடுமையான நெருக்கடி நிலையில் தனியார் வங்கிகளின் மீதான நம்பிக்கையற்ற தன்மை என்கிற எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் ஒரு செயலாக தனியார் வங்கிகளிலேயே இரண்டாவது பெரிய  நிலையில் வைத்து எண்ணப் படுகிற ICICI வங்கியின் மிக மேலிடத்தில் இருந்த ஒரு அதிகாரி தனது பதவியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் ஊழல் மற்று தனக்கு வேண்டியவர்களுக்கு ஆற்றில் போகிற தண்ணீரை அப்பா குடி அம்மா குடி என்று பொதுமக்களின் பணத்தை அள்ளி வழங்கியதே ஆகும்.  

இது ஒரு புறமிருக்க கடன் வழங்கும் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்ட காரணத்தால் , (AXIS BANK) ஆக்சிஸ் வங்கியும் எஸ் வங்கியும் (YES BANK) தங்கள் தங்களது தலைமை நிர்வாக இயக்குனர்களுக்கு          CEO)பதவிநீடிப்புத் தர மறுத்து பத்திரமாக அவரவர்களுடைய வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தன. அதற்கு முன்பாகவே பெருந்தொகை பெருவெள்ளமாக தவறான முறையில் கையாளப் பட்டுவிட்டது. மக்கள் தனியார் வங்கிகளின் மீது நம்பிக்கை இழப்பதற்கு தகுந்த காரணமும் அமைந்துவிட்டது.

ஒரு புறம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வேண்டியவர்களுக்கு வாய்க்காலைத் திறந்துவிட, மறுபுறம் தனியார் வங்கிகளும் நாங்கள் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்று சாதித்துக்காட்ட , நாட்டின் பொருளாதாரம் நடுச்சபையில் வைத்து திரவுபதை ஆக்கப்பட்டது. காப்பாற்றத்தான் கிருஷ்ணன் இல்லை.

விவசாயத்துறையில், விளைபொருட்களுக்கான விலையை உயர்த்தி , விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம்  என்று அரசு தேர்தலுக்கு முன் ஆசைகாட்டி அளித்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிடப்பட்டன. 

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஒரு மதிப்பீடு இன்னொரு வகையில் அச்சுறுத்தியது. அதாவது வேலைவாய்ப்பு மற்றும் அதைச்சார்ந்த நுகர்வோர் எதிர்பார்ப்புகள் பொதுவான  பொருளாதார மந்த நிலையால் கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த நுகர்பொருள்களின் நுகர்வுக் குறியீடு 98.3புள்ளியிலிருந்து  94.8 புள்ளிக்கு சரிந்தது என்று RBIகுறிப்பிட்டது. இந்த சரிவு ,  பணசுழற்சியின் வீழ்ச்சியின் அடையாளம் ஆகும். அதாவது மக்களின் வாங்கும் சக்தி குறைவானதன் காரணமாக,  நுகர்வில் வீழ்ச்ச்சி ஏற்பட்டது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசின் தன்மானத்துக்கு , அதாவது ஊழலை ஒரு போதும் எங்களின் நிழலில் கூட ஒண்டவிடமாட்டோம், அடைமழைக்குக் கூட  எங்களின் ஆட்சியின் தாழ்வாரத்தில் ஊழல் வாதிகள் ஒதுங்கமாட்டார்கள் என்று மார் தட்டிக் கொண்டிருந்த அரசின் தன்மானத்துக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டே ஓடிப்போன விஜய் மல்லையா, நிரவ் மோடி, மேஹுல்சோக்சி ஆகியோர் சாட்சியாக நின்றனர். பிரதமரின் ஊழல் ஒழிப்பின் உத்தமர் என்ற  மாய பிம்பம் இதனால் சுக்குநூறாக உடைந்தது.

மோடி தலைமையிலான மத்திய அரசில் வங்கித் துறையில்அதிலும் கடன் வழங்குவதில் மட்டும் 72ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ள தகவல் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப் படாமலேயே நிதித்துறை வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இத்தகவலை மத்திய ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது
கடன் வழங்குதல் என்ற பெயரில் மெகா சூறையாடல் நடைபெற்றுள்ளது என்பது நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலரும்பொருளியல் அறிஞருமான பிரசாந்த் போஸ் கேட்ட வினாக்களுக்கு ஆர்பிஐ  பதில் அளித்துள்ளது. மேலும் கடந்த காங்கிரஸ் கூட்டணி (2009-2014) அரசில் நடந்த வங்கிக்கடன் முறைகேடுகளை விட மூன்று மடங்கு முறைகேடுகள்  மோடியின் ஆட்சியில் நடந்துள்ளது. ஆர்பிஐ வெளியிட்ட இத்தகவலைக் குறிப்பிட்டு பிரசாந்த் போஸ் "புலனாய்வு அமைப்புகள் எங்கே சென்றன?" என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எத்தனை மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சரமாரி கேள்விகளைக் எழுப்பியுள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் நடைபெற்ற மெகா சூறையாடலுக்கு மத்திய அரசும்,நிதித்துறையும் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுத்துறை வங்கி கணக்குகளில் 88 சதவீதம் இந்த கடன் மோசடியில் பயன்படுத்தப்பட்டுள்ளது .
ரிசர்வ் வங்கி தனது பதிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்பொதுத்துறை வங்கிகள்வெளிநாட்டு வங்கிகள்தனியார் வங்கிகள்சிறு நிதி வங்கிகள்,உள்ளூர் பகுதி வங்கிகளில் கடந்த நான்கரை  ஆண்டுகளில்  77 ஆயிரத்து ஐநூற்றி 21கோடிகளுக்கும் அதிகமாக தொழில்வளர்ச்சி, அதற்கான  வங்கிக்கடன் உதவி என்ற பெயரில் சூறையாடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது மோடி சர்க்காரின் நான்கரை ஆண்டுகளின்  ஆட்சியின் சாதனையாகும்.
காங்கிரஸ் ஆட்சியின் இரண்டாம் காலகட்டமாக2009 ஏப்ரல் முதல் மார்ச் 2014 வரை 10 ஆயிரத்து அறுநூற்று 52 வழக்குகளில் 22 ஆயிரத்து 441கோடிகள் கடன் சூறையாடல் நடத்தப்பட்டுள்து. ஆனால் மோடியின் ஆண்டுகளில் முந்தைய அரசில் நடந்ததை விட 55 ஆயிரம் கோடிகள் அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் மோடியின் ஆட்சியில் பொருளாதாரப் புலி அருண்ஜெட்லி என்கிற சிறந்த,  நிறைய சம்பாதிக்கும், பல கார்பரேட் கம்பெனிகளுக்கு இன்னமும் சட்ட ஆலோசகராக இருக்கும்  வழக்கறிஞர் கையில் இருக்கும் நிதித்துறையில்   ஆயிரத்து நூற்றி 28வழக்குகளின்படி 68 ஆயிரத்து முன்னூற்றி 50கோடிகள் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் முந்தைய காங்கிரஸ் அரசில் பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடிகள் 5ஆண்டுகளில் ஆயிரத்து 331 வழக்குகளில்19ஆயிரத்து 113 கோடிகள் முறைகேடு செய்யப்பட்டுள்ளன.
மோடியின் ஆட்சியில்  கடந்த  ஆண்டுகளில் தனியார் துறை வங்கிகளில் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து27 வழக்குகளில் கூறும் ஆவணங்கள் தரும் தரவுப்படி,  ஆயிரத்து 774 கோடிகள் கடன் எனும் பேரால் சுருட்டப்பட்டுள்ளன. இவ்விதம் சுருட்டியவர்களில் பெரும்பாலானோர் வளர்ச்சி நாயகனின் சொந்த மாநிலமான  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உபரியான தகவல்.
 காங்கிரசின் கடைசி ஐந்துகால ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட 2005 வழக்குகளில் 2, 670 கோடிகள் மோசடி செய்யப்பட்டுள்ளன.
இங்கு தரப்பட்டுள்ள புள்ளிவிபரம் கூறும் தொகை யாவும் முந்தைய காங்கிரஸ்  ஆட்சியைவிட மும்மடங்கு ஆகும். உண்மையில் வளர்ச்சியின் நாயகனின் ஆட்சியில் எது வளர்ந்திருக்கிறது என்றால் , ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த நவீனக் கொள்ளைதான் வளர்ந்து இருக்கிறது.
காங்கிரசை மிஞ்சி சாதித்துக் காட்டுவோம் என மார்தட்டிய பாஜகவினர் செய்த சாதனைகளைப் பார்த்தால் சாதனை இல்லை; வேதனையே வேண்டிய அளவு இருக்கிறது.
(இறைவன் அருளால்  தொடரும்.)
ஆக்கம். இப்ராஹிம் அன்சாரி.  

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget